பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை அருகே இறந்து கிடந்த நபருக்கு இஸ்லாமியர்கள், இந்து முறைப்படி இறுதி சடங்குகளை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 33). திருமணமாகி கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் வீட்டை விட்டு வெளியே வந்து யாருடைய ஆதரவும் இல்லாமல் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சரவணன் மன உளைச்சலில் இருந்ததாகவும், அவர் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
சிகிச்சைக்கு பின்னர் அரசு மருத்துவமனைக்கு வெளியே தங்கி அனாதையாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு பேரணாம்பட்ட அரசு மருத்துவமனை வாயிலிலேயே உயிரிழந்துவிட்டார். பின்னர் அவர் உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சரவணனின் உறவினரான தனகோட்டி என்பவர் பேரணாம்பட்டு பகுதியில் உள்ள மஜ்ஜிதே சேவை குழுவைச் சேர்ந்த இஸ்லாமியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக மஜ்ஜிதே சேவை குழுவைச் சேர்ந்தவர்கள் சரவணனின் உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்தனர். இஸ்லாமியர்களின் இந்த செயல் அப்பகுதியில் உள்ள இந்துக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.