தூத்துக்குடியில் சுடுகாட்டிற்கு செல்ல வழி இல்லாததால் பொதுமக்கள் போராட்டம்

By Velmurugan sFirst Published Sep 20, 2023, 10:25 PM IST
Highlights

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சுடுகாட்டிற்குச் செல்ல பாதை இல்லாததால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி கூசாலிப்பட்டி. இங்குள்ள சுடுகாட்டிற்கு செல்வதற்கு சரியான பாதை வசதி இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனியார் நிலத்தின் வழியாக தான் செல்லவேண்டிய சூழ்நிலை உள்ளது. ஒவ்வொரு இறப்பின் போதும் கடும் போராட்டத்திற்கு பின்னர் தான் உடலை சுடுகாட்டிற்கு செல்லும் நிலை நிலவி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் தனியார் நிலத்தின் உரிமையாளருக்கு மாற்று இடம் கொடுத்து சுடுகாட்டிற்கு பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அந்த கிராமத்தினைச் சேர்ந்த முருகேசன் என்பவர் இறந்து விடவே உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு செல்ல முடியமால் பரிதவித்துள்ளனர். 

காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வர் டெல்லி செல்லாதது ஏன்? அதிமுக மாநிலச் செயலாளர் கேள்வி

தனியார் இடத்தின் உரிமையாளர் கம்பி வேலி அமைத்துள்ளதால் உடலை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து முருகேசன் உறவினர்கள், கிராம மக்கள் கோவில்பட்டி, கடலையூர் சாலையில் சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தர வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி தாசில்தார் லெனின் மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். 

விரைவில் தனியார் நிலத்தின் உரிமையாளருக்கு மாற்றும் இடம் வழங்கி, சுடுகாட்டிற்கு செல்ல சாலை அமைக்கப்படும் என்றும், தற்போது உடலை தனியார் நிலத்தின் வழியாக கொண்டு செல்ல அனுமதி பெற்றுள்ளதாக கூறியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தனியார் நிலத்தின் உரிமையாளர் தனக்கு அரசு மாற்று இடம் வழங்கினால் தனது நிலத்தில் சுடுகாட்டிற்கு செல்வதற்கு பாதை அமைத்துக்கொள்ளலாம் என்று கூறிய பிறகும் வருவாய்துறை நடவடிக்கை எடுக்கமால் வேடிக்கை பார்த்து வருவதால் ஒவ்வொரு இறப்பின் போதும் போராட்டம் நடத்தி தான் உடலை கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

click me!