
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியில் வசித்து வந்தவர் கணேசன் (71). இவரது மனைவி பானுமதி (65), மகன் சாமிநாதன் (36), அவரது மனைவி லட்சுமி (30), இவர்களது மகன் லட்சுமி நாராயணன் (1) ஆகியோர் திருவாரூரில் உள்ள குலதெய்வ வழிபாடு செய்தனர். இதனையடுத்து, நேற்று மாலையில் காரில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை சாமிநாதன் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திருவாரூர்- மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் விசலூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி குளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் கணேசன், அவரது மனைவி பானுமதி (58), மகன் சாமிநாதன் (37), ஒரு வயது குழந்தை லட்சுமி நாராயணன் (1) ஆகிய 4 பேரும் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இதில் சாமிநாதன் மனைவி லட்சுமி (35) மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.