திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் பைக்கில் வந்த கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
செங்குன்றம் அருகே வியாழக்கிழமை அதிகாலை நடைபயிற்சிக்குச் சென்ற அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். சக்கர வாகனங்களில் ஆறு பேர் பார்த்திபனை வெட்டிக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த பாரிநல்லூர் திலகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராக இருந்தவர். 2011 முதல் 2014 வரை பாடிய நல்லூர் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்திருக்கிறார்.
பார்த்திபன் வியாழன் அதிகாலை 6 மணி அளவில் தான் வசிக்கும் வீட்டிற்கு அருகே இருக்கும் அங்காளபரமேஸ்வரி கோயில் மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 6 பேர் பார்த்திமனை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியுள்ளனர். அந்தப் பகுதியில் இருந்தவர்கள் பார்த்திபனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் பார்த்திபனைப் பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவித்துவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பார்த்திபனின் உடலைப் பிரேத பரிசோதனை செய்வதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அதிகாலையில் நடந்துள்ள இந்த பயங்கரக் கொலை தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகிறது என ஆவடி மாநகர காவல் ஆணையர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை புது மண்டபத்தைப் புதுப்பிக்க ரூ.2 கோடி... முதல்வரிடம் உறுதி கூறிய நன்கொடையாளர் ராஜேந்திரன்