திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த புதூர் மேடு காலனி பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (27). இவருக்கும் கடம்பத்தூர் ஸ்ரீதேவி குப்பத்தை சேர்ந்த லாவண்யா (25 ) என்பவருக்கும் ஒன்றரை வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் 2 பேரும் ஸ்ரீபெரும்புதூர் தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தனர். தற்போது லாவண்யா 9 மாத கர்ப்பிணி. அவருக்கு நாளை வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருத்தணி அருகே கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிறைமாத உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த புதூர் மேடு காலனி பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (27). இவருக்கும் கடம்பத்தூர் ஸ்ரீதேவி குப்பத்தை சேர்ந்த லாவண்யா (25 ) என்பவருக்கும் ஒன்றரை வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் 2 பேரும் ஸ்ரீபெரும்புதூர் தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தனர். தற்போது லாவண்யா 9 மாத கர்ப்பிணி. அவருக்கு நாளை வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர் கடந்த 90 நாட்களுக்கு முன்பு முதல் தவணை கொரோன தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் ராமஞ்சேரி கிராமத்தில் நடைபெற்ற முகாமில் 2வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை அவரது உறவினர்கள் பட்டரைபெருமந்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அப்போது, அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அவருக்கு 2வது தவணை தடுப்பூசி செலுத்தியதால் தான் உயிரிழந்திருக்கலாம் என லாவண்யாவின் தந்தை விஜயகுமார் கனகம்மாசத்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அவருடைய மரணத்தை முறையாக பிரேத பரிசோதனை செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவருடைய உறவினர்கள் திருவள்ளுர் ஆர்டிஓ பரமேஸ்வரியிடம் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்ய கால தாமதம் ஆனதால் அவருடைய உறவினர்கள் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனை எதிரே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன், வட்டாட்சியர் செந்தில்குமார் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.