கனிம வளங்கள் மூலம், ஆண்டுக்கு ரூ.98 ஆயிரம் கோடி ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மூலம் நடப்பதாக விசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கல்குவாரிகளை அரசே நடத்த முன்வர வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் பொன்னிவாடி கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் பல விவசாயிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈசன் முருகசாமி, தமிழ்நாட்டில் ஜல்லி, கிரஷர், குவாரி உரிமையாளர்கள் திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தை அறிவித்துள்ளனர். 6 அடிக்கும் கீழுள்ள அனைத்து கனிம வளங்களும் அரசுக்குச் சொந்தமானவை என்பதால், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யாவருமே கல்குவாரி உரிமையாளர்கள் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
கனிம வளங்களை எடுக்க அரசிடம் இருந்து அனுமதி பெற்றுதான் குவாரி நடத்துகின்றனர். எனவே கல் குவாரி என்பது ஒரு தனிமனிதனின் சொத்தல்ல. தமிழக அரசு தற்போது பெரும் நிதிப் பற்றாக்குறையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அரசுக்கு போதிய வருமானம் இல்லை. ஆனால், ஜல்லி, கிரஷர், எம்.சாண்ட், கிரைனைட், மணல் குவாரி போன்ற தோண்டக் கூடிய கனிம வளங்களால் ஆண்டுக்கு மட்டும் ஒரு லட்சம் கோடி வருவாய் ஈட்ட முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2,000 கோடி மட்டுமே வருமானம் வருகிறது. 98 ஆயிரம் கோடி ஊழலாக வெளியே சென்று கொண்டிருக்கிறது.
குவாரி உரிமையாளர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் இணைந்து இந்த ஊழலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார். எனவே, தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைப் போல், கல்குவாரி உள்ளிட்ட அனைத்து கனிம வள குவாரிகளை அரசே எடுத்து நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
undefined
தமிழ்நாடு டிஜிபி ரேஸில் சஞ்சய் அரோரா? புதிய திருப்பம்!
கடந்த 15 ஆண்டுகளாக சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கனிமங்கள் குறித்து ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க வேண்டும். விவசாயிகளின் மிக முக்கியமான 10 கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில் 15 மாவட்டங்களில் ஜூலை 5-ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.
நல்லதங்காள் அணைக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கான இழப்பீடு தொகை வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்து 6 ஆண்டுகள் ஆன பின்பும், அதற்கான கோப்புகளை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அனுப்பாமல் தாமதம் செய்து வருவது கண்டனத்துக்குரியது. அந்த கோப்புகளை விரைந்து அனுப்பி மூன்று மாதங்களுக்குள் இழப்பீட்டுத் தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஆவணங்களை திருத்த முடியாது... நவீன டெக்னாலஜி - பதிவுத்துறை அதிரடி உத்தரவு!
தாராபுரம், மூலனூர் பகுதிகளில் அதிகமாக கண்ணுவேலி விளைந்து கொண்டிருக்கிறது. அதற்கு கட்டுபடியாகின்ற விலை கிடைக்கவில்லை. ரூ. 3000 முதல் 3800 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த கண்ணுவேலி தற்பொழுது ரூ.1500-க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. எனவே, தமிழக அரசு ஒரு கிலோ கண்ணுவேலி விதைகளுக்கு ரூ.3,000 விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் ஈசன் முருகசாமி வலியுறுத்தினார்.