காருக்கு இருக்கும் மரியாதை கூட எங்களுக்கு இல்லை; துப்புரவு தொழிலாளர்கள் வேதனை!!

By Dhanalakshmi GFirst Published Sep 26, 2022, 6:34 PM IST
Highlights

நெல்லை மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு வந்த ஆணையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாநகராட்சி நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மொத்தம்  55 வார்டுகள் உள்ள நிலையில் 700க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நிரந்தர பணியாளர்கள், தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த தற்காலிக பணியாளர்கள் என மூன்று பிரிவுகளாக நெல்லை மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம்  வழக்கமாக உள்ள வருகை பதிவேடு முறையை மாற்றி பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்தியுள்ளது.

மேலும் குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனத்திற்கு சார்ஜ் போடுவதற்கு மண்டல அலுவலகம் வரக்கூடாது. அந்தந்த பகுதிகளில் தற்காலிக சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பணிசுமை அதிகரிக்கும் என ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் பயோமெட்ரிக் முறையை ரத்து செய்து பழைய முறையில் தொடர வேண்டும். வருங்கால வைப்பு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாநகராட்சி சுய  உதவி குழுவை சேர்ந்த தற்காலிக துப்புரவு பணியாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மூன்றாவது நாளாக இன்று மாநகராட்சியின் மைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது சிஐடியு தொழிற்சங்க மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அலுவலகத்தின் முன்பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் ஆணையரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். அப்போது, ஆணையர் அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார்.

Viral video : மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசாமல் இருக்க நூதன முறை! - பலே ஐடியா! 

இதையடுத்து நேரடியாக ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்தார். அப்போது, அனைவரும் அவர்களை சூழ்ந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்து முழக்கங்கள் எழுப்பினர். மேலும் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை புறக்கணிக்கப்படுவதாக ஆணையரிடம் தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு கூச்சல் குழப்பம் நிலவியது. அங்கிருந்த காவலர்கள் தொழிலாளர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து தொழிலாளர்கள் அலுவலகத்தின் மேலே அழைத்துச் செல்லப்பட்டு, ஆணையரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என தொழிலாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இது குறித்து சிஐடியு மாவட்ட தலைவர் மோகன் கூறும் போது இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் மாநகராட்சி ஆணையர் எங்களை மதிக்காமல் செயல்பட்டு வருகிறார். பேச்சுவார்த்தைக்குச் சென்ற தொழிற்சங்க நிர்வாகிகளை சந்திக்க மறுக்கிறார். எனவே கோரிக்கை முடியும் வரை எங்கள் போராட்டத்தை தொடருவோம் என்று தெரிவித்தார். 

குலசை முத்தாரம்மனுக்கு நன்றிக் கடன்; சுடுகாட்டில் 6 அடி ஆழ குழியில் வசிக்கும் மனிதர்; இதுதான் காரணம்!!

இது குறித்து தொழிலாளி ஆவுடையம்மாள் அளித்த பேட்டியில், ''வருகை பதிவேட்டிற்காக எங்களை அலைக்கழிக்கின்றனர். பிற மாநகராட்சிகளில் நாள்தோறும் 800 ரூபாய் வரை சம்பளம் கொடுக்கின்றனர். ஆனால் எங்களுக்கு வெறும் 400 ரூபாய் தான் சம்பளம் தருகின்றனர். எங்களுக்கு இங்கே அமர்வதற்கு கூட இடம் தரவில்லை. அதிகாரிகளின் வாகனத்தை இங்கே நிறுத்துகின்றனர். ஆனால் எங்களை இங்கே இருப்பதற்குக் கூட விடாமல் துரத்துகின்றனர். அந்த கார்களுக்கு இருக்கும் மரியாதை கூட மனிதர்களுக்கு கிடையாதா? என்று வேதனையுடன் தெரிவித்தார். 

click me!