நெல்லை சிங்கி குளம் சமணர் படுக்கையில் ராஜ ராஜ சோழன் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஈழ காசு கண்டெடுகப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சி நடத்துமாறு சமூக ஆர்வலர் ஹரிபரதன் ஆட்சியாளரிடம் வலியுறுத்தினார்.
நெல்லை சிங்கி குளம் பகுதியில் உள்ள சமணர் படுக்கையில் சமூக ஆர்வலர் ஹரிபரதன் சைக்கிளிங்க் சென்றபோது அங்கு கிபி பத்தாம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஈழ காசுகள் கண்டெடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் தான் கண்டெடுத்த ஈழக் காசுகளை ஹரி பரதன் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் நேரில் வழங்கினார். மேலும் தொடர்ந்து சிங்கிகுளம் சமணர் படுக்கையில் அகழ்வாராய்ச்சி நடத்தினால், மேலும் பல்வேறு பழங்காலத்து பொருட்கள் கிடைக்கும் எனவும் ஆட்சியரிடம் வலியுறுத்தினார்.
இது குறித்து சமூக ஆர்வலர் ஹரிபரதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''சிங்கி குளம் சமணர் படுக்கையில் பெரிய குகை இருக்கிறது. இதில் பழங்காலத்து நாணயம் கிடைத்தது. இவை 10ம் நூற்றாண்டின் ராஜ ராஜ சோழன் காலத்தை சேர்ந்தவை. இந்த நாணயங்கள் இலங்கைக்காக அச்சடிக்கப்பட்டவை. எனவே இதன் மூலம் இலங்கைக்கும் நமக்கும் இடையே வர்த்தகம் நடைபெற்றது தெளிவாக தெரிகிறது.
ஆதிச்ச நல்லூர் போன்று சிங்கி குளத்தில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும். இந்த நாணயங்களை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது. ஆட்சியர் நாணயங்களை கண்டவுடன் சந்தோஷப்பட்டார். ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை இது போன்ற சோழர் காலத்து நாணயங்கள் கண்டுபிடிக்கவில்லை'' என்றார்.