நெல்லையில் குவாரி மணல் கடத்தல் வழக்கில் திமுக எம்பி மகன் கைது..?

By Asianet Tamil  |  First Published Sep 15, 2022, 10:08 PM IST

நெல்லையில் குவாரி மணல் கடத்தல் வழக்கில் திமுக எம்பி ஞானதிரவியம் மகன் தினகரன் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


நெல்லையில் குவாரி மணல் கடத்தல் வழக்கில் திமுக எம்பி ஞானதிரவியம் மகன் தினகரன் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கைது செய்யப்படலாம் என்பதால் நெல்லை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாராக ஐபிஎஸ் அதிகாரி சரவணன் பொறுப்பேற்ற பிறகு மாவட்ட முழுவதும் கனிம வளம் கடத்தல் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் லாரிகளை கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார் அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் சார்பில் காவலர்கள் ஆங்காங்கே திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு மணல் கடத்தலில் ஈடுபடும் லாரிகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க - நீதிமன்றம் உத்தரவை மீறி மணல் கடத்தல் நடைபெறுவது எப்படி..? உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி..

அதேபோல் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளும் தொடர்ச்சியாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது இந்த நிலையில் குவாரி மணல் கடத்தல் வழக்கில் நெல்லை திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்தின் மகன் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது அதாவது நெல்லை மாவட்டம் பழவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நாகர்கோவில் உவரி செல்லும் சாலையில் விஸ்வநாதபுரம் ஜங்ஷன் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த இரண்டு டாரஸ் லாரிகளை மடக்கி சோதனையிட்டுள்ளனர்.

அதில் எந்தவித அரசு அனுமதியும் நடை சீட்டும் இல்லாமல் தலா ஐந்து யூனிட் கிரசர் மணல் கடத்திச் செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து லாரிகளை ஒட்டி வந்த அம்பாசமுத்திரத்தை சேர்ந்த ரமேஷ் மற்றும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த ஜெயபாலன் (42) ஆகிய இருவரையும் கைது செய்து லாரிகளையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் இரண்டு லாரிகளும் நெல்லை ஆவரை குளத்தை சேர்ந்த திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்தின் மகன் தினகரனுக்கு சொந்தமானது என்று ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்பேரில் பழவூர் காவல் நிலையத்தில் தற்போது போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் ( எப்ஐஆர்) மூன்றாவது குற்றவாளியாக பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்தின் மகன் தினகரனின் பெயரை சேர்த்துள்ளனர. மேலும் விரைவில் தினகரன் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க  - கைதாகிறார் சவுக்கு சங்கர்..? மதுரை உயர்நீதிமன்றத்தில் சுற்றி வளைத்த போலீஸ்..

 ஏற்கனவே நெல்லை கல்குவாரி விபத்தை தொடர்ந்து ஆட்சியரின் நடவடிக்கையால் குவாரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் குவாரிகளை திறக்க சொல்லி அமைச்சர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை எம்பி ஞானதிரவியம் நேரடியாக மிரட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது சுயலாபத்துக்காகவே இதுபோன்று ஆட்சியரை எம்பி மிரட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற நிலையில் குவாரி மணல் கடத்தல் வழக்கில் எம்பி ஞானதிரவியம் மகன் சிக்கியுள்ள சம்பவம் நெல்லை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!