28 பதக்கங்கள் வாங்கிய தமிழ்நாட்டிற்கு 20 கோடி ரூபாய், ஒரு பதக்கம் கூட பெறாத குஜராத் மாநிலத்திற்கு 200 கோடி ரூபாய் வழங்கி ஒன்றிய அரசு பாராபட்சம் பார்ப்பதாக அமைச்சர் ஐ பெரியசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக மாணவரணி சார்பில் ஆண்டிபட்டி வைகை அணை சாலை பிரிவில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்திற்கு தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தலைமை உரையாக பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி, அண்மையில் சென்னையில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி சென்னை வந்து துவக்கி வைத்தார். இப் போட்டிகளில் ஆசிய அளவில் தமிழகம் 28 தங்கப் பதக்கங்களை வென்றது. ஆனால் குஜராத் மாநிலம் ஒரு பக்கம் கூட பெறவில்லை.
28 தங்கப் பதக்கங்கள் பெற்ற தமிழகத்திற்கு விளையாட்டு மேம்பட்டிற்காக ஒன்றிய அரசு வெறும் 20 கோடி ரூபாய் ஒதிக்கியுள்ளது. ஆனால் ஒரு பதக்கம் கூட பெறாத குஜராத் மாநிலத்திற்கு மோடி அரசு 200 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. இதிலிருந்து தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது, தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம் என்று குற்றம் சாட்டினார்.
இப்பொதுக் கூட்டத்தில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.