தேனியில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய நபரின் பெற்றோருக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், அனுமந்தன்பட்டியை சேர்ந்த வின்சென்ட், வேளாங்கண்ணி தம்பதியினரின் இளைய மகன் .அன்பு ராஜன் (வயது23). முதுகலை பட்டப் படிப்பு முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அனுமந்தன்பட்டியில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த சரக்கு வேன் மீது நிலைதடுமாறி மோதியதில் அன்பு ராஜன் படுகாயம் அடைந்தார்.
அன்புராஜாவுக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அன்புராஜாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்புராஜனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக அன்பு ராஜனின் பெற்றோர்கள் மருத்துவர்களிடம் தெரிவித்தனர். இதனையடுத்து மூளைச்சாவு அடைந்த அன்புராஜனின் இதயம், 2 கண், 2 சிறுநீரகம், கல்லீரல், தோல், உள்ளிட்ட உடல் உறுப்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருப்பவர்களுக்கு தானமாக வழங்கப்பட உள்ளது.
சென்னையில் இராவணனுக்காக நடத்தப்பட்ட விழாவுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம்; போலீஸ் குவிப்பு
இதுவரை மதுரை அரசு மருத்துவமனையில் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வந்த உடல் உறுப்பு தானம் அறுவை சிகிச்சை முதல் முறையாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் இன்று மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர், உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் உடலுக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படும் என அறிவித்தார்.
அதன்படி, உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பிலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உடல் உறுப்புகளை தானம் செய்த அனுமந்தன்பட்டியை சேர்ந்த அன்புராஜன் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளார்கள்.