தேனியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடு மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த தாய், மகன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட வடகரை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் தனது தாய் ஜெயந்தியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வடகரை அம்பேத்கர் சிலை பகுதியில் உள்ள சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் சண்டையிட்டு திடீரென சாலையில் குறுக்கே வந்துள்ளன. இதனை எதிர்பாராத பிரபாகரன் மாடு மீது வேகமாக மோதி தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் தாய் ஜெயந்திக்கு தலையில் பலத்த காயமும், மகன் பிரபாகரனுக்கும் கை கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ஜெயந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட வடகரை தென்கரைப் பகுதிகளில் முக்கிய சாலைகள் அனைத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றித் திரிவதால் இதுபோன்று தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருவது தொடர் கதையாகி இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தொடர்ந்து விபத்து ஏற்படுவதாக குற்றம் சாட்டுவதோடு, உயிரிழப்பு ஏற்பட்டால் தான் நடவடிக்கை எடுப்பார்களா என பெரியகுளம் பகுதி பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D