தேனியில் விவசாயி உயிரிழந்த விவகாரம்; துப்பாக்கிச்சூடு நடத்திய வன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

By Velmurugan s  |  First Published Dec 8, 2023, 10:58 PM IST

நீதிமன்ற உத்தரவுபடி தனது தந்தையை சுட்டுக்கொன்ற வனத்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்தவரின் மகள் வினோதினி தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.


தேனி மாவட்டம் கூடலூர் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதி வனத்துறையினரால் சுடப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஈஸ்வரனை சுட்ட வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

மேலும் ஈஸ்வரனின் மகள் வினோதினி தனது தந்தையை சுட்ட வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வழக்கில் வனத்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Latest Videos

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவினை சுட்டிக்காட்டி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஈஸ்வரனின் மகள் வினோதினி மற்றும் உறவினர்கள் நீதிமன்ற உத்தரவினை காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்து தனது தந்தையை சுட்டுக்கொன்ற வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

click me!