அருணாச்சலபிரதேசத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி வீரமரணமடைந்த மேஜர் ஜெயந்தின் உடல் அவரது சொந்த ஊரில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியதையுடன் தகனம் செய்யப்பட்டது.
அருணாசலபிரதேசத்தின் வெஸ்ட் காமெங் மாவட்டத்தில் அமைந்திருக்கும் தேஷ்பூர் மிசாமரி ராணுவ முகாமிலிருந்து, ராணுவ பணி நிமித்தமாக சீட்டா என்ற ராணுவ ஹெலிகாப்டரில் நேற்று காலை லெப்டினன்ட் கர்னல் வினய் பானு ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் ஆகியோர் புறப்பட்டுச் சென்றனர்.
இந்த ஹெலிகாப்டரின் ரேடார் சிக்னல் காலை 9.15 மணியளவில் துண்டிக்கப்பட்டதை அடுத்து இந்திய ராணுவம், சேவைகள் வாரியப் படை, இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் மற்றும் அருணாசலப்பிரதேச காவல்படையினர் ஆகியோர் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். இதனையடுத்து வெஸ்ட் காமெங் மாவட்டத்திற்கு உட்பட்ட டிர்ராங் அருகிலுள்ள மண்டாலா என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளாகியிருந்தது கண்டறியப்பட்டது. இந்த விபத்தில் இரண்டு ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மேஜர் ஜெயந்த் (வயது 33) தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தேசிய மாணவர் படை ராணுவ பிரிவில் பயிற்சி பெற்று, பல்வேறு நிலைகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று அண்டர் ஆபிஸர் எனும் ரேங்கிங் அடிப்படையில் 'சி' சான்றிதழ் பெற்றவர். இதனையடுத்து சென்னையில் உள்ள ஆபிஸர்ஸ் பயிற்சி மையத்தின் வாயிலாக தேர்வாகி கடந்த 2010ம் ஆண்டு இந்திய ராணுவப் பணியில் இணைத்துக் கொண்டார்.
இந்திய ராணுவத்தின் மேஜர் பொறுப்பிலிருந்தாலும் தான் விடுமுறையில் வரும்போதெல்லாம் தனது கல்லூரிக்குச் சென்று நண்பர்களையும் பேராசிரியர்களையும் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும் தனது கல்லூரியின் என்சிசி மாணவ, மாணவியரிடம் ஊக்கமளிக்கும் வகையில் உரையாடி தேசப்பற்றை ஊட்டியவர்.
நாட்டின் இரண்டாவது திருநங்கை காவல் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு? ராஜினாமா கடிதத்தால் பரபரப்பு
ராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டே ஆண்டுகள் உள்ளநிலையில், தன்னுடைய ஓய்வுக்காலத்திற்குப் பிறகு மதுரை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களை தன்னைப் போன்றே, ராணுவத்தின் உயர் பதவியில் அமர வைக்க வேண்டும் என்பது மேஜர் ஜெயந்த்தின் கனவாக இருந்தது என அவரது பேராசிரியர் வீ.காமராசன் தொலைபேசியில் நம்மிடம் பேசினார். பேராசிரியர் காமராசன் என்சிசி-யில் மேஜராக இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றி வருகிறார்.
மேலும் அவர் கூறுகையில், ஜெயந்த்தின் தந்தை ஆறுமுகமும் எங்களது கல்லூரி மாணவர்தான். தாயார் மல்லிகா. அவரும்கூட பட்டதாரிதான். நடுத்தரக் குடும்பம். ஒரே பையனாக இருந்தபோதும்கூட, உற்றார் உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி தங்களது மகனை ராணுவத்தில் சேர்த்து தேசத்துக்காகப் பங்காற்றச் செய்வதில் மிகுந்த உறுதியோடு இருந்தனர். எனக்கு இரண்டு பையன்கள். ஜெயந்த் எனது 3-ஆவது பையனைப் போன்று எனது குடும்பத்தாரிடம் அன்போடு பழகினார். இப்போதும்கூட எனது மகன்கள் ஜெயந்த்தை அண்ணா என்றே அழைப்பார்கள். ஒவ்வொரு முறை விடுமுறைக்கு வரும்போதும் எங்களைப் பார்க்காமல் அவர் சென்றதில்லை. அவரது இறப்பு என்பது தனிப்பட்ட முறையில் எங்களுக்கு மட்டுமன்றி தேசத்திற்கே பேரிழப்புதான் என்றார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயந்த்துக்கு செல்லா ஸ்ரீஜா என்பவரோடு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் இல்லை.
திருச்சியில் பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு கம்பி நீட்டிய வடமாநில இளைஞர் ஓராண்டுக்கு பின் கைது
இந்நிலையில் ஜெயந்த்தின் உடல் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது.ராணுவ வீரரின் உடல் விமான நிலைய இயக்குனரகம் முன்பு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி விஜய் ஆனந்த், மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பிறகு மேஜர் ஜெயந்த்தின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலிருந்து ராணுவ வாகனத்தில் ஜெயந்த்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலத்திற்கு கொண்டு வரப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தேனி மாவட்ட ஆட்சியர் ஷ்ஜீவனா மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். ராணுவா வீரர் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஐ பெரியசாமி ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, மேஜர் ஜெயந்தின் உடல் ராணுவ வாகனத்தில் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிசடங்கு நடத்தப்பட்டது. இறுதியாக துப்பாக்கி குண்டுகள் முழக்க மேஜர் ஜெயந்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது கிராமமக்கள் அனைவரும் வீரவணக்கம் என்று முழங்கி இறுதி அஞ்சலியை செலுத்தினர்.