இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர்களை தொடர்பு கொள்ளும் பெண் அவர்களை ஏமாற்றி பணம் பறிப்பில் ஈடுபடுவதாகவும், தற்போது வரை 8 இளைஞர்களை ஏமாற்றி உள்ளதாகவும் இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம் செட்டியப்பட்டி பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவன உரிமையாளர் மூர்த்தி (வயது 30). இவது இளம் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு மூலம் அறிமுகமாகி தன்னை திருமணம் செய்து கொண்டு மூன்றே மாதத்தில் தன்னை ஏமாற்றி 1.5 லட்சம் பணம் மற்றும் ஐந்து சவரன் நகை பறித்துச் சென்றுவிட்டதாக தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் ஓமலூர் அருகே எம் செட்டியப்பட்டி பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவனர் மூர்த்திக்கு இன்ஸ்டாகிராமில் ரசிதா என்ற பெண் அவரது ஐடியில் இருந்து குறும் தகவல்கள் வந்துள்ளது. இதனையடுத்து மூர்த்தி அந்த பெண்ணிடம் நட்பாக பழகியுள்ளார். பின்னர் இருவரும் தனிமையில் சந்தித்து பேச தொடங்கியுள்ளனர். அப்போது ஒருவரை ஒருவர் காதலித்து மார்ச் மாதம் 30ம் தேதி திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணமான சில நாட்களிலேயே மூர்த்திக்கும், ரசிதாவிற்கும் இடையே பல கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரசிதா கடந்த 4ம் தேதி ஓமலூர் அருகே உள்ள எம் செட்டியப்பட்டியில் உள்ள மூர்த்தி வீட்டில் இருந்து மாயமானதாகவும், காலையில் வீட்டில் தேடிப் பார்த்த போது 1.5 லட்சம் பணம் மற்றும் 5 சவரன் நகையும் மாயமாக இருந்தது தெரியவந்தது. மேலும் ரசீதா இது போன்று கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள ஆண்களை ஏமாற்றி சுமார் 8 திருமணங்கள் செய்துள்ளார்.
இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரசிதா மீது கோவை மாவட்ட துடியலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளதாகவும் அவரது சமூக வலைதள கணக்குகளை ஆராய்ந்த போது பல ஆண்களை இந்த பெண் ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் கார், பைக் போன்ற சொகுசு வாகனங்களுடன் பதிவு செய்யும் இளசுகளை குறி வைத்து இது போன்ற மோசடி சம்பவங்களை அரங்கேற்றம் செய்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
காலி மதுபாட்டில்களுக்கு கிடைக்கின்ற மதிப்பு கூட தேங்காய்களுக்கு இல்லை - விவசாயிகள் வேதனை
போலிக் கணக்குகள் மூலம் பல ஆண்களைத் தனது வலையில் சிக்க வைத்து அவர்களுடன் நட்பாகப் பேசுவது போல் தொடங்குவார். பின்னர் ஆபாசமாக சாட்டிங் செய்தும், கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்பியும் மயக்கியுள்ளார். தொடர்ந்து, அந்த உரையாடல்களை வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தொளசம்பட்டி காவல் துறையினர் கூறுகையில், புகார் கொடுத்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவிப்பதாகவும், அவரது அக்கம்பக்க வீட்டில் இருப்பவர்களை விசாரித்த போது அது போன்று எந்த ஒரு பெண்ணும் வந்து இங்கு தங்க வில்லை என தகவல் தெரிவித்துள்ளனர். முழுமையாக விசாரித்து தான் வழக்கு பதிவு செய்வோம் என்று தெரிவித்துள்ளனர்.