சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கிராம நிர்வாக அலுவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்ய முயள்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மானத்தாள் கிராம நிர்வாக அலுவலராக வினோத்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதி இன்றி மண் கடத்தியதாக மானத்தால் பகுதியைச் சேர்ந்த சித்துராஜ் மற்றும் உப்பாரப்பட்டி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த விஜி ஆகிய இருவர் மீதும் கனிம வளத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் தொளசம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மண் கடத்திய டிராக்டர் மற்றும் பொக்லைன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் வினோத் குமார் வழக்கம் போல் இன்று காலை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது தொளசம்பட்டி அருகே உள்ள கரட்டூர் பிரிவு சாலை எனும் இடத்தில் சித்துராஜ் வழிமறித்து விஏஓவை தாக்கி செல்போனை பிடுங்கி உள்ளார். தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, உன்னை கொன்றால் இனி எந்த விஏஓக்களும் மண் வண்டியை பிடிக்க மாட்டார்கள் என கூறிக் கொண்டே இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த வீச்சருவாளை எடுத்து வெட்ட முயன்றுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதால் முதலீடுகள் அதிகம் வருகின்றன - அமைச்சர் பெருமிதம்
உடனடியாக சுதாரித்துக் கொண்ட விஏஓ இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து வேகமாக தப்பி உள்ளார். ஆனால் சித்துராஜ் பின்னாலேயே வீச்சருவாளுடன் இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று விஏஓவை கொல்ல முயன்றுள்ளார். அங்கிருந்து உயிர் தப்பிக்க விஏஓ வினோத்குமார் அருகே இருந்த தொளசம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். தொடர்ந்து சித்துராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் தொளசம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சித்துராஜை வலை வீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் மணல் மாப்பியாக்களால் விஏஓ வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் சேலத்தில் விஏஓவை கொலை செய்ய வீச்சரிவாளுடன் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.