veerappan brother mathaiyan death : மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 5.45 மணிக்கு மாதையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் :
தமிழகத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பன் என்று கூறினால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இவர் கடந்த 2004ஆம் ஆண்டு போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இவரது மூத்த சகோதரர் மீசை மாதையன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 75. வீரப்பனை போலவே மாதையன் மீதும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அதில் முக்கியமானது 1987ஆம் ஆண்டு சத்தியமங்கலத்தில் ரேஞ்சர் சிதம்பரம் கொலை வழக்கு. இதுதொடர்பாக பங்களாபுதூர் போலீசாரால் கைது செய்யப்பட்ட மாதையனுக்கு ஈரோடு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
undefined
முன்னதாக கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாதையன், சத்தியமங்கலம் கொலை வழக்கின் தீர்ப்பால் கோவை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து சேலம் மத்திய சிறைக்கும், மீண்டும் கோவை சிறைக்கும் மாற்றம் செய்யப்பட்டார். கடந்த 7 ஆண்டுகளாக சேலம் சிறையில் மாதையன் தண்டனை அனுபவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. மாதையனுக்கு இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் பிரச்சினை இருந்து வந்தது. இதன் காரணமாக 35 ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சைகள் பெற்று வந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் அவ்வப்போது சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அண்ணன் மாதையன் :
இதையொட்டி மாதையனுக்கு சிறை அதிகாரிகள் பரோல் வழங்கி வந்தனர். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பரோலில் சென்று சிகிச்சை பெற்று சிறைக்கு திரும்பினார். ஆனால் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. கடந்த மே ஒன்றாம் தேதி திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக உடல்நிலை மோசமடைந்து வந்தது. இதனால் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 5.45 மணிக்கு மாதையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தினால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் பலத்த பாதுகாப்பினை சேலம் முழுக்க போட்டுள்ளனர்.