மாணவனிடம் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வரும்படி கூறியதன் பேரில், அவன் பெற்றோரை அழைத்து வந்தான். அப்போது பீர் பாட்டிலை எடுத்து வந்து உடைத்து, என்னை மட்டும்தான் குறி வைத்து இப்படி கேட்கிறீர்கள் என தலைமை ஆசிரியரை நோக்கி குத்தச் சென்றான். சக ஆசிரியர்கள் அவனை தடுத்து நிறுத்தினர்.
ஆத்தூர் அருகே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியரை பீர் பாட்டிலால் குத்த முயன்ற பிளஸ் 2 மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மஞ்சினி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவன் ஒருவன், தலையில் பின்புறம் கொண்டைபோல் வைத்துக் கொண்டு நேற்று பள்ளிக்கு வந்துள்ளான். தலைமையாசிரியர் அந்த மாணவனை அழைத்து இதுபோல், பள்ளிக்கு வரலாமா என கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், அலுவலக அறையிலிருந்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களை கீழே தள்ளி உடைத்தான்.
சத்தம் கேட்டு அங்கிருந்த ஆசிரியர்கள் ஓடி வந்து மாணவனை சமாதானப்படுத்தினர். தகவலறிந்த பெற்றோர்- ஆசிரியர் கழக நிர்வாகிகளும், பள்ளிக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் மாணவனிடம் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வரும்படி கூறியதன் பேரில், அவன் பெற்றோரை அழைத்து வந்தான். அப்போது பீர் பாட்டிலை எடுத்து வந்து உடைத்து, என்னை மட்டும்தான் குறி வைத்து இப்படி கேட்கிறீர்கள் என தலைமை ஆசிரியரை நோக்கி குத்தச் சென்றான். சக ஆசிரியர்கள் அவனை தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே பள்ளி தலைமை ஆசிரியர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மாணவன் மீது வழக்குப்பதிவு செய்த ஆத்தூர் நகர போலீசார் மாணவனை கைது செய்தனர்.