
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வந்த நிலையில் தற்போது தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சேலம் ஜான்சன் பேட்டை அருகே உள்ள திடீர் நகர் பகுதியில் வட மாநில தொழிலாளர்களை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் காவல் உதவி ஆணையர் மாடசாமி சந்தித்து பேசினர். அவர்களின் பாதுகாப்பு குறித்தும் சமூக வலைத் தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், உங்களுக்கு பாதுகாப்பாக தமிழக அரசும், காவல்துறையும் உள்ளது என்றும் பேசியுள்ளனர்.
தொடர்ந்து வட மாநில தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஹோலி பண்டிகையை கொண்டாடும் விதமாக இனிப்புகளை ஊட்டி விட்டார். பதிலுக்கு வடமாநில தொழிலாளர்களும் ஆட்சியருக்கும், காவல் உதவி ஆணையாளர்களுக்கும் இனிப்புகளை ஊட்டி விட்டு கொண்டாடினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறுகையில், சமூக வலைத்தளங்களில் வடமாநிலத்தவர்கள் தாக்குவது போல் பொய்யான வதந்திகள் பரவி வருகிறது.
இதனை நம்ப வேண்டாம். தமிழக அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது. காவல்துறையும் உங்களுக்கு தேவையான பாதுகாப்பையும் வசதிகளையும் செய்து தரும் என்று பேசினார். மேலும் சமூக வலைத்தளங்களில் இது போன்ற வதந்திகளை பரப்புவோர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.