ஓமலூர் அருகே 127 கிலோ வெள்ளி கட்டிகள் கடத்திய வழக்கில் கேரளாவைச் சேர்ந்த 20 பேரை ஓமலூர் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெள்ளி கட்டிகள், கடத்தலுக்கு பயன்படுத்திய 6 கார்கள், 12 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம் ஓமலூர் வழியாக சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. வடமாநிலங்களை இணைக்கும் இந்த சாலையில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ரெய்பூரில் இருந்து, சேலம் செவ்வாய் பேட்டையைச் சேர்ந்த வெள்ளி வியாபாரிகள் சந்தோஷ், சாகர், விக்ராந்த், ஸ்ரீராம் ஆகியோர் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 127 கிலோ வெள்ளியை வாங்கி கொண்டு, காரில் சேலம் நோக்கி வந்தனர்.
Breaking: ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி முன்னிலை
அப்போது அவர்களை பின்தொடர்ந்து இரண்டு கார்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், ஓமலூர் ஆர்.சி.செட்டிபட்டி பகுதியில், வெள்ளி கொண்டு வந்த காரை வழிமறித்து நிறுத்தினர். தொடர்ந்து வெள்ளியை கொண்டு வந்த காரின் ஓட்டுநருடன் சேர்த்து 6 பேர் கும்பல் நான்கு பேரையும் கீழே இறங்கி விட்டுவிட்டு, காருடன் 127 கிலோ வெள்ளிகட்டிகளை கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து ஓமலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், வெள்ளி கடத்திச் சென்ற காரை கைப்பற்றிய காவல் துறையினர், வெள்ளிகட்டிகளை கடத்தி சென்ற, கேரளாவை சேர்ந்த 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், கொள்ளையர்களிடம் இருந்து வெள்ளிகட்டிகள் பறிமுதல் செய்யப்படவில்லை. இந்த நிலையில், 17 பேர் கொண்ட ஓமலூர் உட்கோட்ட குற்றபிரிவு காவல் துறையினருக்கு இந்த கொள்ளையில் தொடர்புடைய கேரள மாநிலம் திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த முக்கிய குற்றவாளிகளை தொடர்ந்து தேடி வந்தனர்.
நகையை கடத்திய குற்றவாளிகள், வெள்ளி கட்டி வைத்துள்ள குற்றவாளிகள் ஒரே இடத்தில் இல்லாமல், தொடர்ந்து வெவ்வேறு பகுதியாக சென்ற வண்ணம் இருந்தனர். தொடர்ந்து ஐந்து மாத தேடலுக்கு பின்னர் 20 பேர் கொண்ட கொள்ளை கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 127 கிலோ வெள்ளிகட்டிகளை நூறு சதவீதம் முழுமையாக கைப்பற்றினர்.
மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய 6 கார்கள், 12 செல்போன்களை பறிமுதல் செய்தனர். கொள்ளை வழக்கில் ஐந்து மாதம் தொடர் விசாரணை நடத்தி குற்றவாளிகளையும், வெள்ளிகட்டிகளையும் பறிமுதல் செய்தல் குற்றபிரிவு காவல் துறையினருக்கு சேலம் சரக காவல் துணை தலைவர் ராஜேஸ்வரி, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார், ஓமலூர் துணை கண்காணிப்பாளர் சங்கீதா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து டி.ஐ.ஜி ராஜேஸ்வரி பாராட்டு சான்றுகளையும் பரிசுத்தொகையையும் வழங்கினார்.