முதல்வரை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி சேலத்தில் திடீர் ஆய்வு

By Velmurugan s  |  First Published Feb 16, 2023, 3:05 PM IST

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட முல்லை நகர் மற்றும் நெத்திமேடு மாநகராட்சி  தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


சேலம் மாநகராட்சிக்குட்பட்ட முல்லை நகர் பகுதியில் இயங்கி வரும் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முறையாக வழங்கப்படுகிறதா எனவும், உணவு தரமானதாக உள்ளதா எனவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, முல்லை நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளிடம் உணவு சுவையாக மற்றும் தரமாக உள்ளதா என கேட்டறிந்தார். மேலும், காலை எத்தனை மணிக்கு உணவுகள் வழங்கப்படுகிறது எனவும், எத்தனை மாணவர்கள் இதனால் பயனடைகிறார்கள் என்பது குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவினை மாணவர்களுடன் அமர்ந்து கலந்துரையாடிக் கொண்டே உணவருந்தினார். 

Tap to resize

Latest Videos

undefined

தொடர்ந்து, அந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் கற்றல், கற்பித்தல் முறை, அளிக்கப்படும் பயிற்சிகள், அதற்கான அட்டவணைகள் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், அந்தப் பள்ளியில் உள்ள கழிவறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, சுகாதாரமான முறையில் பராமரித்திட ஆசிரியர்களிடம் அறிவுரை வழங்கினார்.

அமைச்சர் மூர்த்தியின் சொந்த தொகுதியில் கண்மாயை காணவில்லை; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இதனைத் தொடர்ந்து, மணியனூர் பிரதான சாலை நெத்திமேடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள மாணவர்களிடம் கலந்துரையாடி என்ன உணவுகள் வழங்கப்படுகிறது எனவும் கேட்டறிந்து,  சமையல் கூடத்தில் உணவுப் பொருட்களின் இருப்பு குறித்தும், பதிவேடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தெரிவித்ததாவது: முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து பள்ளிகளில் ஆய்வு செய்துள்ளேன். ஒவ்வொரு மாவட்டத்திற்கு செல்லும்போது அங்குள்ள பள்ளிகளில் இதுபோன்று ஆய்வுகளை மேற்கொண்டு, முதலமைச்சரிடம் அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.

சேலம் மாநகராட்சியில் காலை உணவுத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தினால் மாணவர்கள் பள்ளிக்கு காலையில் விரைவாக வருகின்றனர். புதிதாக மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. ஆசிரியர்கள் மாணவர்கள் ஏதேனும் குறைகள் தெரிவித்தால் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். மாணவர்களின் வருகைப் பதிவேடு மற்றும் மாணவர்களின் சேர்க்கையில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

click me!