அம்மா உணவகத்தில் தொடர்ந்து பணி செய்ய வேண்டுமென்றால் மாதம் 5000 ரூபாய் வழங்க வேண்டும் என மிரட்டி வரும் என திமுக கவுன்சிலரும் மண்டல குழு தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
சேலம் மாநகரில் 11 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு அம்மா உணவகத்திலும் இரண்டு ஷிப்டுகளில் 6 பேர் வீதம் 12 பேர் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் 50-வது வார்டுக்கு உட்பட்ட மணியனூர் பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் பணி புரிந்த ஆறு பெண்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐம்பதாவது வார்டுக்கு உட்பட்ட மணியனூர் பகுதியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் இரண்டு ஷிப்டுகளில் ஆறு பேர் விதம் 12 பேர் பணிபுரிந்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் தற்போது திடீரென ஆறு பேரை நீக்குவதாக கூறி திமுக கவுன்சிலரும் மண்டல குழு தலைவருமான அசோகன் தெரிவிக்கிறார்.
நாங்கள் மக்களுக்காக சேவை செய்து வருகிறோம் அம்மா உணவகத்தின் ஒரு சில மாதங்களில் எங்கள் குழுவில் உள்ள 12 பேரும் சேர்ந்து பணம் போட்டு மக்களுக்காக உணவை வழங்கி வந்துள்ளோம். தற்போது பணியில் நீட்டிக்க மாதம் 5000 ரூபாய் கேட்டால் எவ்வாறு வழங்க முடியும். இந்த சம்பளத்தை வைத்து தான் குடும்பம் வாழ்ந்து வரும் நிலையில் பணம் கொடுக்க வேண்டுமென மிரட்டுவது எங்களுக்கு மிகவும் வேதனையாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனவே எங்களை தொடர்ந்து பணியில் அமர்த்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்மா உணவகத்தில் இருந்து பணி நீக்க மாட்டோம் என்றும் பணிபுரிந்து வருபவர்கள் தொடர்ந்து பணியில் இருக்கலாம் என அறிவித்திருந்த நிலையில் தற்போது திமுகவினர் இவ்வாறு எங்களை மிரட்டுவது மிகவும் வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார்.