அரசு ரகசியங்களை பாதுகாக்கத் தவறிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டாமா என திராவிடர் கழக தலைவர் வீரமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
பெரம்பலூரில் நேற்று மாலை திராவிடர் கழகத்தின் சார்பில் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பயண பொதுக்கூட்டம் தி.க பெரம்பலூர் மாவட்ட தலைவர் சி. தங்கராசு தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் தேரடி திடல் அருகே நடைபெற்ற இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், திமுக மாவட்ட கழக செயலாளர் குன்னம் ராஜேந்திரன், மதிமுக மாநில அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் ரோவர் வரதராஜன், உள்ளிட்ட தோழமை கட்சிகளின் பிரமுகர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி பங்கேற்று சமூகநீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் விளக்கத்தை பற்றி எடுத்துரைத்தார்.
அப்போது பேசிய அவர் ஒரு அமைச்சராக இருந்தாலே பதவி ஏற்கும் போது அரசியல் ரகசியங்களை பாதுக்காப்பேன் என்று உறுதி மொழி ஏற்கும் போது அது ஆளுநருக்கும் பொருந்தும் அல்லவா . ஆளுநர் ஏன் மசோதாக்களை நிறைவேற்றவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் தரலாமா .? அரசு ரகசியங்களை ஆளுநர் காக்க தவறியதற்காகவே ஆளுநர் பதவி விலக வேண்டாமா என்று வீரமணி கேள்வி எழுப்பினார்.
undefined
தொடர்ந்து பேசுகையில் ஆளுநரின் ஆலோசகராக அண்ணாமலையை பதவி ஏற்று கொள்ள சொல்லலாம் என்று விமர்சனம் செய்தார். மேலும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலைகள், பிறந்த குழந்தை பேசியது என்பது பற்றியும், காதலர் தினத்தை விலங்கு நல வாரியம் பசு அரவணைப்பு தினமாக கொண்டாடப்படுவதாக கூறியதை பற்றியும் விமர்சனம் செய்தார்.
இக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, மனித நேய மக்கள் கட்சி, இந்திய முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.