நீலகிரியில் பள்ளத்தில் விழுந்த மாணவனை அப்படியே விட்டுச்சென்ற நண்பர்கள்; உடலை கைப்பற்றி விசாரணை

By Velmurugan sFirst Published Aug 21, 2023, 9:38 AM IST
Highlights

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மலை உச்சியில் இருந்து கிடுகிடு பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த பள்ளி மாணவனின் உடலைக் கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஹாதி. கார் ஓட்டுநர். இவரது மகன் அப்துல் ஆஷிக் (வயது 13) 8ம் வகுப்பு படித்து வந்தார், நேற்று விடுமுறை நாள் என்பதால் அப்துல் ஆஷிக் அதே வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் குன்னூர் அருகே உள்ள பார்க் சைடு எஸ்டேட் பகுதிக்கு சென்றுள்ளார்,

பார்க் சைடு எஸ்டேட் பகுதியில் எக்கோ ராக் என்று அழைக்கப்படும் மலைப்பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியானது முற்றிலும் பார்க் சைடு எஸ்டேட் மற்றும் நான் சச் எஸ்டேட் நிர்வாகத்திற்கு சொந்தமான பகுதியாகும்.

சந்திரனை நெருங்கிய சந்திரயான் 3.. நிலவின் புகைப்படங்களை அனுப்பிய LHDAC - முழு விவரம்!

இந்நிலையில் சுற்றி பார்க்க சென்ற அப்துல் ஆஷிக் மற்றும் நண்பர்கள் எக்கோ ராக் மலைப்பகுதியில் நேற்று மதியம் விளையாடிக் கொண்டிருந்த பொழுது  மலை உச்சியில் இருந்து கிடுகிடு பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதனைக் கண்ட நண்பர்கள் அச்சத்தில் அங்கிருந்து யாருக்கும் சொல்லாமல் தங்களது வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அப்துல் ஆஷிக் இரவாகியும் வீட்டிற்கு வராததால் அப்துல் ஆஷிக்கின் தந்தை அப்துல் ஹாதி குன்னூர் காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என்று தகவல் அளித்துள்ளார்.

நேற்று இரவு முதல் அப்துல் ஹாதி தனது மகனை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி உள்ளார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. இன்று நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் நண்பர்கள் மூவரும் எக்கோ ராக் மலை பகுதிக்கு சென்றதாகவும், அப்பொழுது அப்துல் ஆஷிக் தவறி விழுந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

கோவையில் சரக்கு வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட குழந்தைகள்; வீடியோ வெளியாகி பரபரப்பு

இதனைத் தொடர்ந்து மேல் குன்னூர் ஆய்வாளர் வேளாங்கண்ணி உதய ரேகா மற்றும் கொலக்கம்பை உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ்  தலைமையில் தீயனைப்புதுறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஆஷிக் தவறி விழுந்ததாக கூறப்படும் எக்கோ ராக் மலைப்பகுதியில் பள்ளத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் அப்துல் ஆஷிக்கின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பின்பு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு ஆஷிக்கின் உடலை அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கொலக்கம்பை காவல்துறையினர் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!