பயிர்கள் கருகியதால் உயிரிழந்த விவசாயிக்காக காவிரித் தாயே கண்ணீர் வடிப்பாள் - ராமதாஸ் இரங்கல்

By Velmurugan s  |  First Published Sep 26, 2023, 11:27 AM IST

பயிர்கள் கருகியதால் நாகை மாவட்ட விவசாயி உயிரிழந்த சம்பவத்தை கேட்டு காவிரித் தாயும் கண்ணீர் வடிப்பாள் என பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.


பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த திருவாய்மூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற விவசாயி அவரது குறுவை பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகியதால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் மன உளைச்சலில் மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தன்னிடமுள்ள தண்ணீரைக் கொடுத்து வயல்வெளிகளைச் செழிக்கச் செய்து அனைவரையும் வாழ வைத்து பார்ப்பது மட்டுமே காவிரித் தாயின் வழக்கம்.  ஆனால், கர்நாடகத்தால் சிறை வைக்கப்பட்ட தன்னால் தண்ணீர் கொடுக்க முடியாததால்,   ஓர் உழவர் அவரது பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் உயிரிழந்ததை எண்ணி குட திசையில் இருந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பாள். கர்நாடக அரசு இனியாவது மனமிறங்கி காவிரித் தாயை விடுதலை செய்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க வேண்டும். 

Tap to resize

Latest Videos

உயிரிழந்த உழவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.  பாதிக்கப்பட்ட குறுவைப் பயிர்களுக்கு  ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் நிவாரண உதவி வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!