நாகை அருகே மீனவ கிராமத்தில் மோதல்; திமுக பிரமுகரை கைது செய்யக்கோரி சாலை மறியல்

By Velmurugan sFirst Published Sep 1, 2023, 12:04 PM IST
Highlights

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீனவ கிராமத்தில் ஏற்பட்ட மோதலில் கிராம மக்கள் இருவேறு குழுக்களாக பிரிந்து கட்டை, கற்களால் தாக்கிக்கொண்டதில் 5 பேர் படுகாயம்.

நாகப்பட்டினம் அடுத்த நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் கிராம குத்தகை கணக்கு தொடர்பாக கடந்த ஆறு மாதமாக இரு பிரிவினருக்கு இடையே பிரச்சினை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் திமுக நகர் மன்ற உறுப்பினரின் கனவரும், மாவட்ட அறங்காவலர் குழு தலைவருமான நாகரத்தினம் தலைமையில் கிராம நிர்வாகத்தினர் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட 40-க்கும் மேற்பட்டோர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரின் வீடு புகுந்து கட்டை, அரிவாள், கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இதில் ஜெகநாதன், கலைவாணி, ராம்குமார், கிருஷ்ணமூர்த்தி சௌந்தர்ராஜன் உள்ளிட்ட 5 பேருக்கு தலை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயங்களுடன் படுகாயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் மற்றும் கிராம மக்கள் வெட்டு காயங்களுடன் நாகை - நாகூர்  தேசிய நெடுஞ்சாலையில் வெட்டாற்று பாலத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

50 வயது பெண்ணை அடித்து கொன்ற கள்ளக்காதலன்; கரூரில் பரபரப்பு சம்பவம்

தகவல் அறிந்து வந்த நாகப்பட்டினம் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மீனவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினர் அவர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்ய முயற்சி செய்தனர். ஆனால் மீனவர்கள் வாகனத்தில் ஏற மறுத்து காவல் துறையினருடன் மல்லு கட்டினர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் திமுகவைச் சேர்ந்த நாகரத்தினம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல் துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். 

பண்ணை வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொடூரமாக அடித்து கொலை - அதிர்ச்சியில் உறவினர்கள்

இதனையடுத்து டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டு காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மீனவர்கள் போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

click me!