முதல்வரின் பாதுகாப்பிற்காக சென்ற ஆம்புலன்ஸ்? அரசு நடத்திய போட்டியில் மயங்கி விழுந்த மாணவன் பலி

By Velmurugan sFirst Published Aug 26, 2023, 12:24 PM IST
Highlights

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று மயங்கி விழுந்த மாணவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கருவிழந்தநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன், நித்தியா தம்பதியினரின் மூத்த மகன் ரிஷி பாலன் (வயது 17). செம்பனார்கோவில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். நேற்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தரங்கம்பாடியை அடுத்த காட்டுச்சேரியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பள்ளி சார்பில் 400 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் மாணவன் ரிஷி பாலன் பங்கேற்றான். போட்டிகள் தாமதமாக தொடங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் முதல் சுற்று ஓடி முடித்த மாணவன் மேற்கொண்டு ஓட முடியாமல் மயங்கி விழுந்தார். 

நேற்று முதலமைச்சர் மயிலாடுதுறைக்கு வருகை தந்த நிலையில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் அரசு அதிகாரிகள் முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றதால் எந்த விதமான முதல் உதவி சிகிச்சையும் அளிக்கப்படாமல் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டியில் மருத்துவ குழு இடம்பெறாமல் அலட்சியமாக நடைபெற்றதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக 5.30 மணிக்கு மயங்கி விழுந்த மாணவனை தாமதமாக 6 மணிக்கு மருத்துவமனைக்கு பள்ளி வாகனத்தில் அழைத்துச் சென்றதாக தெரிகிறது. 

பல ஆண்களுடன் தொடர்பு; பெற்ற மகளை கொன்று வீசிய தந்தை - திருச்சியில் பரபரப்பு

மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மாணவனின் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறையின் அலட்சியம் காரணமாக முதல் உதவி சிகிச்சைக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலதாமதமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் மாணவன் உயிரிழந்ததாக தெரிவித்து உறவினர்கள் உடலை வாங்க மறுத்து விட்டனர். 

தம்பி உங்களுக்கு இன்னும் கல்யாண வயசு வரலப்பா... காவலர்களுக்கு அல்வா கொடுத்த 2K கிட்ஸ்

தொடர்ந்து மயிலாடுதுறை மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால் பதற்றமான சூழல் நிலவியது. தனது மகனுக்கு ஏற்பட்ட நிலைமை போல் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்று இறந்த மாணவனின்  தாயார் நித்தியா மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், கவனக்குறைவாக செயல்பட்ட மாவட்ட கல்வி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோறியும் உறவினர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி, பாமக ஆகிய கட்சியினர் ஒன்று சேர்ந்து மயிலாடுதுறை, கும்பகோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

click me!