
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த சென்பராயன் பகுதியைச் சேர்ந்த முத்துமாசிலாமணி என்பவரது மகன் குமரேசன் (வயது 35), இவரது மனைவி புவனேஸ்வரி (28). குமரேசன் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்த நிலையில், மனைவி அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு திருமணமாக 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை இல்லை என்று சொல்லப்படுகிறது.
வேளாங்கண்ணி கடல் அலையில் சிக்கிய 3 மாணவர்கள்; கரை ஒதுங்கிய இரு உடல்கள்
மேலும் குமரேசனுக்கு வியாபாரம் சரியாக இல்லாத சூழலில் பல்வேறு இடங்களில் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இவர்களின் கடன் ரூ.15 லட்சமாக உயர்ந்தது. கடனை முறையாக திரும்ப செலுத்த முடியாமல் தம்பதியர் அவதிப்பட்டு வந்துள்ளனர். அதே போன்று திருமணமாக 2 ஆண்டுகள் கடந்த நிலையில், குழந்தை பிறக்கவில்லை என்பது குறித்தும் உறவினர்கள் தம்பதியரிடம் தொடர்ந்து கேள்வி கேட்டு வந்துள்ளனர்.
இதனால் மொத்தமாக விரக்தி அடைந்த தம்பதியர் இன்று அதிகாலை தங்கள் வீட்டு மொட்டை மாடியின் அருகில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியை இருவரும் கைகளால் பிடித்து தற்கொலை செய்து கொண்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த கரியாபட்டினம் காவல் துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தம்பதியர் குழந்தை இல்லாததால் மனைஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகாலை நேரத்தில் தம்பதியர் மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.