சென்னையில் ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு குண்டர் சட்டமா.! ரவுடிகளுக்கு புரியும் மொழியில் செக் வைத்த கமிஷனர்
கொலை, கொள்ளை, உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் 23 பேரை ஒரே வாரத்தில் குண்டர் சட்டத்தில் சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரவுடிகளுக்கு எச்சரிக்கை
சென்னையில் கடந்த ஜூலை மாதம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் தொடர் கொலைகள், கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக தமிழக அரசு மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அப்போது சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றார். செய்தியாளர்களிடம் பேசியவர் ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.
Watch | ஆம்ஸ்ட்ராங் வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிவிட்ட காவல்துறை? / Rajaram Rtd ACP Interview
ஒரு வாரத்தில் 23 பேருக்கு குண்டாஸ்
இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக சென்னையில் ஒரு கொலை சம்பவம் கூட நடைபெறவில்லை. இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னை பெருநகரில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 11.08.2024 வரை சென்னை பெருநகரில் கொலை. கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சட்டம் ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்ட 453 குற்றவாளிகள்.
Murder
836 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 133 குற்றவாளிகள். கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 183 குற்றவாளிகள். குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 29 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 05 குற்றவாளிகள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் 07 குற்றவாளிகள், பாலியல் தொழில் நடத்திய 17 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம் படுத்திய 05 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் 04 குற்றவாளிகள் என மொத்தம் 836 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எச்சரிக்கை விடுத்த போலீஸ்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின்பேரில் கடந்த 05.08.2024 முதல் 11.08.2024 வரையிலான 7 நாட்களில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள். கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிப்பதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.