தமிழக மீனவர்கள் 4 பேர் அதிரடி கைது..! இலங்கை கடற்படை அட்டுழியம்..!

By Manikandan S R SFirst Published Oct 3, 2019, 5:50 PM IST
Highlights

வேதாரண்யத்தை சேர்ந்த 4 மீனவர்கள் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது.

நாகை மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பல நேரங்களில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து வருகிறது. மீனவர்களின் வலையை அறுத்து எறியும் சம்பவமும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இது குறித்து பல முறை இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் மீனவர்கள் தெரிவித்தாலும் கைது நடவடிக்கை தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று வேதாரண்யம் பகுதியை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்துள்ளனர்.

வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை சேர்ந்தவர் ராமு. இவரும் அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் கஜேந்திரன், ராஜேந்திரன், பழனிவேல் ஆகிய 4 பேரும் நேற்று மதியம் பைபர் படகில் மீன்பிடிக்க சென்றனர். இன்று காலை நெடுந்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் திடீரென மீனவர்களின் படகை சுற்றி வளைத்துள்ளனர்.

தொடர்ந்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்கள் 4 பேரையும் கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்கள் வைத்திருந்த வலைகள், கருவிகள் மற்றும் மீன்களையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மீனவர்கள் 4 பேரையும் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கைது சம்பவம் வேதாரண்யம் பகுதியில் இருக்கும் மீனவர்களுக்கு இன்று காலை தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 4 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு தரவேண்டும் என்று மீனவர்கள் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

click me!