நாகையில் பிரதமர் மோடிக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகம் செய்த வழக்கறிஞர்கள் நந்தினி, நிரஞ்சனா ஆகியோரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தவர் வழக்கறிஞர் நந்தினி. கல்லூரி காலத்தில் இருந்தே தனது போராட்டத்தை பல வடிவங்களில் நடத்தி வந்தவர். தற்போதும் பொதுப் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வழக்கறிஞர் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோர் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாகையில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து பிரசாரம் செய்தனர். அதிக வரி வசூல், வேலையில்லா திண்டாட்டம், தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது என ஒன்றிய அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை நாகை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் என பொதுமக்கள் கூடும் இடங்களில் விநியோகம் செய்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் அனைவரும் மோடியால் பயனடைந்தவர்கள் தான் - வானதி விளக்கம்
தொடர்ந்து நாகை கடை வீதியில் இருவரும் துண்டு பிரசுரங்கள் விநியோகித்துக் கொண்டு இருப்பதை அறிந்த பாஜகவினர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். துண்டு பிரசுரங்களை விநியோகித்த பெண் வழக்கறிஞர்களின் துப்பட்டாவை பாஜகவினர் பிடித்து இழுத்ததாக அப்பெண்கள் குற்றம் சாட்டினர். துண்டு பிரசுரம் விநியோகம் குறித்து பாஜக நகர பொருப்பாளர் சுதாகர் அளித்த புகாரின் அடிப்படையில் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோரை இரவில் காவல் நிலையம் அழைத்து வந்த ஆய்வாளர் சுப்ரியா அவர்களிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்.
பன்றிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு; திண்டுக்கல்லில் விநோத வழிபாடு
அப்போது காவல் நிலையம் முன்பு 50 க்கும் மேற்பட்ட பாஜகவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாஜகவினரை சமாதானம் செய்து அப்புறப்படுத்திய காவல் துறையினர் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோரை காவல்துறை வாகனத்தில் பலத்த பாதுகாப்புடன் ஏற்றி சென்று நாகை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் மதுரைக்கு அனுப்பி வைத்தனர். நாகையில் பிரதமர் மோடிக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகித்த இரண்டு வழக்கறிஞர்களுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.