
What Caused The Accident TVK 100 Foot Flagpole Fell?: தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரையில் நாளை (ஆகஸ்ட் 21) நடைபெற உள்ளது. மதுரை-தூத்துக்குடி சாலையில் உள்ள பாரப்பத்தியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டுக்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாநாட்டுத் திடலில் தவெகவின் 100 அடி உயர கொடிக்கம்பம் சாய்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
தவெக கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்தது
அதாவது மாநாட்டு திடலில் இன்று 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடந்தது. 100 அடி உயர கொடிக்கம்பத்தை கிரேன் எந்திரம் மூலம் தூக்கி நிறுத்தும் பணி நடந்தது. அப்போது திடீரென 100 அடி உயர கொடிக் கம்பம் திடீரென சாய்ந்து அங்கு நின்றிருந்த காரின் மீது விழுந்தது. இதில் கார் கண்ணாடிகள் உடைந்து அப்பளம் போல் நொறுங்கியது. இதைப்பார்த்ததும் தவெகவினர் அலறியடித்து ஓடினார்கள்.
விபத்துக்கு காரணம் என்ன?
அந்த காரில் ஆட்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. கொடிக்கம்பம் சாய்ந்து விழுவதை பார்த்ததும் தவெகவினரும் அங்கிருந்து தெறித்து ஓடி விட்டதால் நல்லவேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிக எடையுள்ள 100 அடி உயர கொடிக்கம்பத்தை துக்கி நிறுத்திய கிரேனின் பெல்ட் அறுந்ததால் விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு முன்னேற்பாடு இல்லை
மேலும் கொடிக்கம்பத்தை நிறுவதற்கான சரியான அடித்தளமும் அமைக்கவில்லை என கூறப்படுகிறது. எந்த வித பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் இல்லாமல் தூக்கி நிறுத்திய நிலையில் விபத்து நடந்துள்ளது. இவ்வளவு பெரிய கொடிக்கம்பத்தை தூக்கி நிறுத்தும்போது முன்னேற்பாடாக அதனை சுற்றி ஆட்கள் நிற்க, வாகனங்கள் நிற்க தடை விதித்து இருக்க வேண்டும். ஆனால் அந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் செய்யப்படவில்லை.
பாதுகாப்பு ஏற்பாட்டில் கோட்டை விட்டாரா விஜய்?
நல்லவேளையாக ஆட்கள் மேல் கொடிக்கம்பம் விழாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தவெக மாநாட்டுக்கு பேனர் வைத்த கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இப்போது கொடிக்கம்பமும் சாய்ந்து விழுந்ததது. தவெக மாநாட்டில் ஏறட்டுள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது. தவெக மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் விஜய் கோட்டை விட்டாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.