
100 Feet High Flagpole Falls At Madurai TVK Conference: தவெகவின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடந்தது. இந்நிலையில், தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரையில் நாளை (ஆகஸ்ட் 21) நடைபெற உள்ளது. மதுரை-தூத்துக்குடி சாலையில் உள்ள பாரப்பத்தியில் மிக பிரம்மாண்டமாக தவெக மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு எல்இடி திரைகளுடன் கூடிய டிஜிட்டல் வடிவிலான பெரிய மேடை அமைக்கப்பட்டுள்ளது.
தவெக மதுரை மாநாடு
மேலும் பார்வையாளர் கேலரிகள், வாகன பார்க்கிங், தற்காலிக கழிப்பறை, குடிநீர் வசதிகள், மருத்துவ முகாம்கள், உணவுப்பொருட்களை விற்கும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தவெக தலைவர் விஜய்யின் புகைப்படம், தவெக கொள்கை தலைவர்களாக காமராஜர், பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள், தவெக கொடி கட்சிகள், அலங்கார மின் விளக்குகள், தோரணங்கள் என மாநாடு களைகட்டியுள்ளது.
தவெக 100 அடி கொடிக்கம்பம் விழுந்து விபத்து
மாநாட்டு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாநாட்டு திடலில் இன்று 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடந்தது. 100 அடி உயர கொடிக்கம்பத்தை ஜேசிபி எந்திரம் மூலம் தூக்கி நிறுத்தும் பணி நடந்தது. அப்போது திடீரென அந்த 100 அடி உயர கொடிக் கம்பம் திடீரென சாய்ந்து விழுந்தது. இதைப்பார்த்ததும் தவெகவினர் அங்கு இருந்து தெறித்து ஓடினார்கள். அதிவேகமாக சாய்ந்த அந்த பிரம்மாண்டமான கொடிக்கம்பம் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரின் மீது விழுந்தது.
சுக்கு நூறாக நொறுங்கிய கார்
இதில் அந்த கார் கண்ணாடிகள் உடைந்து சுக்கு நூறாக நொறுங்கியது. நல்ல வேளையாக அந்த காரில் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. அதே வேளையில் கொடிக்கம்பம் விழுந்த காரின் பக்கத்தில் நின்ற மற்றொரு காரில் 4 பேர் உள்ளே இருந்தனர். அந்த காரில் கொடிக்கம்பம் விழுந்து இருந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு இருக்கும். மேலும் கொடிக்கம்பம் சாய்வதை பார்த்த தவெக கட்சியினர் தெறித்து ஓடி விட்டதால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
விபத்துக்கு காரணம் என்ன?
அதிக எடையுள்ள 100 அடி உயர கொடிக்கம்பத்தை எந்த வித பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் இல்லாமல் தூக்கி நிறுத்திய நிலையில் விபத்து நடந்துள்ளது. கொடிக்கம்பத்தை துக்கி நிறுத்திய கிரேனின் பெல்ட் அறுந்ததால் விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. விபத்து நடந்தவுடன் போலீசார் உடனடியாக விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். ஏற்கெனவே தவெக பேனர் வைக்கும்போது கல்லூரி மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், இப்போது தவெக கொடிக்கம்பமும் விழுந்துள்ளது அக்கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.