ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நாகர்கோவிலைச் சேர்ந்தவர்களிடம் ரூ.56 லட்சம் மோசடி செய்த நபர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை ஐரேனியபுரம் கோணத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் பிரவிதா (வயது 29). இவர் நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், எனக்கு ஐரேனியபுரத்தைச் சேர்ந்த அபிஷா (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர், தற்போது பெங்களூரு கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த ஜோயல் தேவா (37) என்பவரை திருமணம் செய்து பெங்களூருவில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அபிஷாவும், அவருடைய கணவர் ஜோயல் தேவாவும் தங்களுக்கு ரயில்வே துறையில் முக்கிய அதிகாரிகளை தெரியும் என்றும், அவர்கள் மூலமாக ரயில்வேயில் வேலை வாங்கி தர முடியும் என்றும் என்னிடம் கூறினர். ஆனால் வேலை வாங்கித் தர வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என்றும் கூறினார்கள். இதை நம்பி ரூ.20 லட்சத்தை நான் கொடுத்தேன். இதே போல கிள்ளியூர் பண்டாரவிளையைச் சேர்ந்த பிறைஜா என்பவரிடம் ரூ.10 லட்சமும், முள்ளுவிளையைச் சேர்ந்த அரவிந்த் என்பவரிடம் ரூ.14 லட்சமும், ராஜ்குமார் என்பவரிடம் ரூ.12 லட்சமும் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்கள் வாங்கினர்.
நாமக்கல் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி ஒருவர் பலி
அந்த வகையில் 4 பேரிடம் மொத்தம் ரூ.56 லட்சம் வாங்கினார்கள். ஆனால் அவர்கள் கூறியது போல ரயில்வேயில் வேலை வாங்கித் தரவில்லை. எனவே நாங்கள் பணத்தை திரும்பத் தரும்படி கேட்டோம். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்கவில்லை. வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை வாங்கி மோசடி செய்து விட்டனர். இந்த மோசடியில் தேனியைச் சேர்ந்த முரளி (24) என்பவர் உள்பட மேலும் 3 பேருக்கு தொடர்பு உள்ளது. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி ஜோயல் தேவா, அவருடைய மனைவி அபிஷா, முரளி உள்பட 5 பேர் மீது காவல் உதவி ஆய்வாளர் சார்லெட் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தார்.
ஹெட் லைட்டை டிஸ்கோ லைட்டாக மாற்றி சாலையில் ஆட்டம் போட்ட ஆசாமிகளால்; பயணிகள் எரிச்சல்
அப்போது சம்பந்தப்பட்ட 3 பேரும் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் சார்லெட் தலைமையிலான காவல் துறையினர் நேற்று முன்தினம் பெங்களூர் சென்று ஜோயல் தேவா, அபிஷா மற்றும் முரளி ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.