அத்திவரதருக்கு சாம்பிராணி தைலம், மூலிகை திரவியங்கள் பூச்சு... இனி 40 ஆண்டுகளுக்கு அத்திவரதர் ஜலவாசம்!

By Asianet TamilFirst Published Aug 17, 2019, 7:54 AM IST
Highlights

குளத்துக்குள் உள்ள அத்திவரதர் மண்டபத்தின் கீழே உள்ள அறையில் அத்திவரதர் சிலை வைக்கப்படும் என்று இந்து சமய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து குளத்தில் வழக்கம்போல் நீர் நிரப்பப்பட உள்ளது. இனி அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு பிறகு 2059-ம் ஆண்டு மீண்டும் குளத்திலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க வருவார்.

கடந்த ஒன்றரை மாதத்துக்கும் மேலாகப் பக்தர்களுக்கு அருள் பாலித்துவந்த அத்திவரதர், இன்று வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள குளத்துக்குள் வைக்கப்படுகிறார். இனி மீண்டும் 2059-ம் ஆண்டில்தான் குளத்திலிருந்து வெளியே வருவார்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்தசரஸ் குளத்திலிருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் அத்திவரதர் வைபவம் இந்த ஆண்டு நடைபெற்றது. இதற்காக  ஜூலை 1-ம் தேதி கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முதல் 31 நாட்கள் சயன கோலத்திலும் ஆகஸ்ட் 1 முதல்   நின்ற கோலத்திலும் அத்திவரதர் காட்சி அளித்தார்.
அரிதான அத்திவரதர் தரிசனத்தைக் காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து அத்திவரதரை தரிசித்தனர். ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் அத்திவரதரைத் தரிசிக்க காஞ்சிபுரம் வந்தனர். சுமார் 1 கோடி பேர் அத்திவரதரை தரிசித்துவிட்டு சென்றனர். அத்திவரதரை சயன கோலத்தில் 43 லட்சம் பக்தர்கள் தரிசித்த நிலையில், நின்ற கோலத்தில் சுமார் 47 லட்சம் பேர் தரிசித்ததாகக் கூறப்படுகிறது. 10 முதல் 12 மணி நேரம்வரைகூட பகதர்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர்.


கடந்த 47 நாட்களாக அருள் பாலித்துவந்த அத்திவரதர் தரிசனம் நேற்றோரு முடிவுக்கு வந்தது. கடைசி நாள் என்பதால் கட்டுக்கடங்காமல் கூட்டம் அலைமோதியது. நேற்று இரவு 9 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 9 மணிக்கு பிறகு ராஜகோபுர வாசல் மூடப்பட்டது. கோயிலுக்குள் இருந்த பக்தர்களுக்கு நள்ளிரவு தாண்டியும் அத்திவரதர் அருள் பாலித்தார். அத்திவரதரை இன்று குளத்தில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்திவரதருக்கு பரிகார பூஜைகளும் 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாம்பிராணி தைலம், மூலிகை திரவியங்கள் அத்திவரதர் சிலைக்கு பூசப்பட உள்ளது.
இதனையடுத்து இரவு 10 மணிக்கு மேல் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்பட உள்ளது. குளத்துக்குள் உள்ள அத்திவரதர் மண்டபத்தின் கீழே உள்ள அறையில் அத்திவரதர் சிலை வைக்கப்படும் என்று இந்து சமய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து குளத்தில் வழக்கம்போல் நீர் நிரப்பப்பட உள்ளது. இனி அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு பிறகு 2059-ம் ஆண்டு மீண்டும் குளத்திலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க வருவார்.

click me!