கோவை மாவட்டத்தின் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், உணவு, குடிநீர் தேடி ஊருக்குள் வந்த பாகுபலி யானை சாலையில் நின்று கொண்டிருந்த காரை ஆக்ரோஷமாக விரட்டியது.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக வனப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாகி விட்டது.
undefined
அந்த வகையில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் தண்ணீர் அருந்திய பாகுபலி யானை சமயபுரம் வழியாக சாலையை கடக்க முயன்றது. அப்போது, யானை வருவதை கண்ட காரில் இருந்த பயணிகள் காரை நிறுத்தி யானை வருவதை பார்த்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக பாகுபலி யானை ஆக்ரோஷமாக காரை விரட்டியது. நல்வாய்ப்பாக காரின் ஓட்டுநர் காரை முன்னோக்கி இயக்கி சென்றதால் உயிர் தப்பினர்.
தொடர்ந்து யானை மேட்டுப்பாளையம் - வனபத்ரகாளியம்மன் கோவில் பிரதான சாலையில் கம்பீரமாக நடந்து சென்றது. அப்போது, கன்றுக் குட்டி ஒன்று யானையை பார்த்துக் கொண்டே சென்ற போது சற்று நேரம் நின்று அதனை ஒரு முறை முறைத்து விட்டு மீண்டும் நெல்லிமலை வனப் பகுதிக்குள் சாவகாசமாக நடந்து சென்றது. இதனால் சமயபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.