கோவை மக்களவை தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு கிடைக்கும்? அரசியல் கட்சிகளின் கணக்கு என்னவாக இருக்கிறது?
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக தனது கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. அந்த வகையில், திமுக கூட்டணியில் கடந்த 2019 தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கோவை மக்களவைத் தொகுதி இந்த முறை அக்கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை. அந்த தொகுதி திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அக்கட்சிக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது. எனவே, கோவை மக்களவை தொகுதி கவனம் ஈர்த்துள்ளது.
கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலம் திமுகவுக்கு எப்போதும் சவால் நிறைந்ததாகவே உள்ளது. இதனை திமுக தனக்கான பிரஸ்டிஜ் ப்ராப்ளமாகவும் பார்க்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக பெருவெற்றி பெற்றாலும், கோவையில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுகவே வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் கூட்டணி கட்சியான பாஜக வெற்றி பெற்றது. அம்மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெற்றது.
undefined
இதையடுத்து, கோவையை தனது கோட்டையாக மாற்ற செந்தில் பாலாஜியை திமுக களமிறக்கியது. அவருக்கு அதற்கான பணிகளை செய்து உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு அபார வெற்றியை தேடித் தந்தார். அதிமுகவின் கோட்டை ஆக இருந்த கோவை மாவட்டம் செந்தில் பாலாஜி பொறுப்புக்கு வந்த பின்னர் திமுகவின் கோட்டையாக மாறி வருகிறது. மக்களவைத் தேர்தல் அவரது களப்பணி பெரிதும் உற்று நோக்கப்பட்டதற்கு இடையே, சட்டவிரோத பண பறிமாற்ற வழக்கில் அவர் சிறை சென்று விட்டார்.
இருப்பினும், கோவையில் அவர் போட்ட விதை இன்று வளர்ந்து நிற்கிறது. செந்தில் பாலாஜிக்கு பிறகு, மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக முத்துசாமி நியமிக்கப்பட்டாலும், கோவையில் உதயநிதி பம்பரமாக சுழன்று வருகிறார். அவரது பிரசாரமும், வியூகமும் கோவையை திமுக வசமாக்கியது என கூறி அவருக்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்த இந்த தேர்தல் பெரிய வாய்ப்பாக உள்ளது.
இந்த பின்னணியில், கோவை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படாததால், அந்த தொகுதியில் திமுகவே போட்டியிடுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். கோவை மக்களவை தொகுதியில் பாஜகவுக்கும் கணிசமாக வாக்கு வங்கி உள்ளது. பாஜக சார்பாக, அண்னாமலை அல்லது வானதி சீனிவாசன் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. ஆனால், தேர்தலில் போட்டியிட்டால் மற்ற தொகுதிகளில் பணியாற்ற முடியாது என கூறி அண்ணாமலை மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவின் கோட்டையாக கோவையை வைத்திருப்பதில் பெரும் பங்கு எஸ்.பி.வேலுமணிக்கு உள்ளது. எனவே, அதிமுக வேட்பாளரும் டஃப் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிஏஏ சட்டம் ஒருபோதும் திரும்பப் பெறப்படாது: உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்!
கோவை மக்களவை தொகுதியை பொறுத்தவரை திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் அந்த தொகுதியில் நேரடியாக போட்டியிடுவதில்லை. பெரும்பாலும் கூட்டணி கட்சிகளுக்கே கோவை தொகுதி ஒதுக்கப்படுகிறது. கடந்த 1952ஆம் ஆண்டு முதல் 2019 மக்களவைத் தேர்தல் வரை கோவையின் வரலாற்றை பார்த்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், காங்கிரஸும் மட்டுமே அங்கு கோலோச்சியுள்ளது. 6 முறை காங்கிரஸும், 8 முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு முறை திமுகவும், ஒரு முறை அதிமுகவும், இரண்டு முறை பாஜகவும் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்,நடராஜன் 571,150 லட்சம் வாக்குகள் பெற்று 1.5 லட்சத்துக்கும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 3,92,007 வாக்குகள் பெற்று இரண்டாமிடமும், மக்கள் நீதி மய்யத்தின் மகேந்திரன் 1,45,104 வாக்குகள் பெற்று மூன்றாமிடமும் பிடித்தனர்.
இந்த முறை பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது. கூட்டணி கட்சிக்கு கோவையை திமுகவும் ஒதுக்கவில்லை. எனவே, திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இடையே கோவையில் மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவை தொகுதியில் போட்டியிட திமுகவில் விருப்ப மனு கொடுத்தவர்களின் பட்டியல் நீள்கிறது. அதில், மகேந்திரன் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார். அவருக்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.
ஓபிஎஸ் கூடாரத்தை காலி செய்யும் அதிமுக..! மாவட்ட செயலாளர்களை அதிரடியாக தட்டி தூக்கிய எடப்பாடி
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து திமுகவுக்கு வந்த அவருக்கு ஏராளமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றில் எதுவும் பெரிதாக செய்து தரப்படவில்லை என்பதால், அவருக்கே சீட் கிடைக்க அதிக வாய்ப்பு என்கிறார்கள். கடந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட மகேந்திரன் 11.65 சதவீத வாக்குகளை பெற்று 3ஆம் இடம் பிடித்தார். முதலிடம் பிடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவில் உள்ளது. கோவையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. அவரும் தற்போது திமுக கூட்டணியில் இணைந்துள்ளார். இது திமுகவுக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
ஒருவேளை மகேந்திரனுக்கு சீட் கிடைக்கும் பட்சத்தில், கடந்தகால தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டு பார்க்கும்போது, கூட்டணி கட்சிகளின் பலத்துடன் திமுக வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஆனால், அதிமுகவும், பாஜகவும் தனித்தனியே களத்தில் உள்ளதும் இங்கு கவனிக்கத்தக்கது.
தேர்தல் வெற்றிக்குப் பின்னர் கோயம்புத்தூர் யூனியன் பிரதேசமாக மாறலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. கடந்த முறை பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் கொங்கு நாடு தனி பிரதேசம் என்பது பற்றி பரவலாக பேசப்பட்டது. இந்த முறை பாஜக தனித்து போட்டியிடுவதால், இந்த விவகாரமும் இந்த தேர்தலில் பிரதானமாக களமாடும் என்பதால், பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.