கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் அலுவலகத்திற்குள் புகுந்த நபரை, அங்கிருந்தவர்கள் விரட்டியடித்த நிலையில், அந்த நபர் அரசுப் பேருந்தில் மோதி தற்கொலை செய்து கொண்டார். இதற்கான சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் தெற்கு தொகுதி எம்எல்ஏ-வாக வானதி சீனிவாசன் இருந்து வருகிறார். இவரது அலுவலகத்திற்குள் நேற்று மாலை 5.50 மணியளவில் மர்ம நபர் ஒருவர் அனுமதியும் உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அலுவலகத்தில் இருந்த விஜயன் என்பவர் அவரை அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.
அந்த நபர் வெளியேற மறுக்கவே, ஒரு கட்டத்தில் விஜயன் மர்ம நபரை வேகமாக சாலையில் தள்ளி விட்டுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் எம்எல்ஏ அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளன. மர்ம நபர் அலுவலகத்திற்குள் புகுந்தது குறித்து இரவு 8.30 மணியளவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவையில் MLA வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இருந்து வெளியே தள்ளிவிடப்பட்ட நபர் மர்ம மரணம்
அலுவலகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட நபர் கோவை அண்ணா சிலை சிக்னல் அருகே உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் அரசு போக்குவரத்து கழக பஸ் மோதி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதற்கான சிசிடிவி காட்சிகளை கோவை மாநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.