அதிகளவு புரோட்டின் பவுடர்.. ஜிம்முக்கு சென்ற இளைஞர்.. திடீரென உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்

கோவையில் உடற்பயிற்சி செய்ய அதிகளவு புரோட்டின் பவுடர் மற்றும் அசைவ உணவு உட்கொண்ட வாலிபர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கோவை, மணியகாரம்பாளையம் ரவீந்திரநாத் தாகூர் சாலையில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவரது இளைய மகன் தினகர் (30). தங்களது தோட்டத்தில் விவசாய வேலைகளை கவனித்து வந்த தினகர் கடந்த சில மாதங்களாக அருகில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக சென்று இருக்கிறார். 

அங்கு உடலை முறுக்கு ஏற்றுவதற்காக,  புரோட்டின் பவுடரை  உட்கொண்டு வந்த தினகர் அதிக அளவு அசைவ உணவுகளையும் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. இதனிடையே தினகருக்கு ஏற்கனவே கொலஸ்ட்ரால் இருந்த நிலையில் நேற்று முன்தினம் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டதோடு வாந்தி எடுத்துள்ளார்.

Latest Videos

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வாந்தியை நிறுத்த அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மாத்திரை வாங்கி வந்த நிலையில், மாத்திரையை சாப்பிட மறுத்த தினகரன் வலியால் துடித்துள்ளார். இரவு 10:00 மணி அளவில் வலியால் அவதிப்பட்ட தினகரை அழைத்துக் கொண்டு அவரது குடும்பத்தினர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தினகரை பரிசோதித்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். 

ஆனால் சிகிச்சை பலனின்றி தினகர் உயிரிழந்த நிலையில்  தினகரின் உடல் கோவை இ எஸ் ஐ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார், தினகரின் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக, புரோட்டின் பவுடரை அதிகமாக உட்கொண்டதன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதா ? அல்லது ஏற்கனவே கொழுப்பு சத்தால் பாதிக்கப்பட்ட தினகர் அதிகளவு அசைவ உணவுகளை எடுத்துக் கொண்டதன் காரணமாக உயிரிழந்தாரா ? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  பிரேத பரிசோதனை அறிக்கை வந்த  பிறகே இறப்பிற்கான காரணம் தெரியவரும் போலீசார் கூறும் நிலையில் மகனுக்கு மணம் முடிக்க வரன் பார்த்து வந்த தந்தை மற்றும் தினகரின் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இதையும் படிங்க..ரூ.20000க்கு குறைவான சிறந்த டாப்-5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ

இதையும் படிங்க..இனிமே இப்படித்தான்! அதிகாரிகள் மாற்றம்! அமைச்சர்கள் மாற்றம்? அதிரடியில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின் - ஏன்?

click me!