கோவையில் இன்ஸ்டாகிராமில் புகைப்பிடித்தவாறு பட்டாகத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளம் பெண்ணை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் அண்மையில் சத்திய பாண்டியன் என்பவரை ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டு, அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். மறுநாளே நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவர் பட்டப்பகலில் வெட்டிகொலை செய்யப்பட்டார். முன் பகை காரணமாக கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் நடைபெற்ற கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து மாநகர காவல் துறையினர் ரௌடிகளை கண்காணித்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது வரை சுமார் 50க்கும் மேற்பட்ட ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சமூக வலைதளங்களையும் சைபர் கிரைம் காவல் துறையினர் உண்ணிப்பாக கவனித்து வருகின்றனர். அந்த வகையில், கோவையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் “பிரண்ட்ஸ் கால் மி தமன்னா” என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளார். அவர் அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்பிடித்தவாறு பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “எதிரி போட நினைத்தால், அவனை போடும் ஓடுனா கால வெட்டுவோம்” என்ற வன்முறையை தூண்டும் வகையிலான பாடலுடன் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த பெண் அண்மையில் நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவரை கொலை செய்ய நபர்களுடன் இன்ஸ்டாவில் நண்பராக உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாநகர காவல் துறையினர் இளம் பெண் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரை பிடிக்க மாநகர காவல் துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர்.