மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு, கோவை கார் வெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு, கோவை கார் வெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்தஆண்டு அக்டோபரில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின்(28) என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவரது வீட்டில் வெடிப்பொருட்கள் தயாரிக்கப்படும் ரசாயனங்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர், தமிழக அரசிடம் இருந்த இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையான (என்.ஐ.ஏ.) ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில தீவிரவாதிகளை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு நவம்பர் மாதம் 19-ம் தேதி கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் நாகுரி பகுதியில் ஆட்டோவில் கொண்டு சென்ற குக்கர் குண்டு வெடித்து சிதறியது. இதில் தீவிரவாதி ஷாரிக், ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகிய 2 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த இரண்டு சம்பவத்தை அடுத்து அவ்வப்போது பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையிலும் ஈடுபட்டு கைது நடவடிக்கைளையும் மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், இரு குண்டுவெடிப்பு சம்பவங்கள் பற்றியும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மேலும் கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபினும், மங்களூரு தீவிரவாதி ஷாரிக்கும் கோவையில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு, கோவை கார் வெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு இஸ்லாமிய தனியார் ஊடகம் மூலமாக 68 பக்கங்கள் கொண்ட அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.