அதிமுகவை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி பாஜகவில் சேரப்போகிறார் என்ற தகவல் வெளியான நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்கள் நேற்று பாஜகவில் இணைய உள்ளார்கள் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கான நிகழ்ச்சி கோவை தனியார் நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழக பாஜகவினர் யாரெல்லாம் பாஜகவில் இணையப்போகிறார் என்று கூறிவந்தனர்.
அதில் அதிமுகவை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி சேரப்போகிறார் என்ற தகவல் தான் அது. இதனையடுத்து பாஜகவினரை அதிமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் கல்யாண சுந்தரம், “முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குறித்து வெளியாகும் தகவல் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை.
இது அயோக்கியத்தனமான முயற்சி. 1972 ஆம் ஆண்டு எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த நாளில் இருந்து அதிமுக குடும்பமாக எஸ்.பி.வேலுமணி குடும்பம் இருந்து வருகிறது. அவர் பிறக்கும் போதே அதிமுககாரராகத்தான் பிறந்தார்” என்று கூறினார்.
தற்போது இந்த செய்தி குறித்து விளக்கமளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “பாஜகவில் சேரப் போவதை எல்லாம் பற்றிப் பேசுவதே வீண் செயல், வெறும் 3 சதவீதம் வாக்கு உள்ள பாஜகவுக்கு எல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டுமா” என்று விளக்கமளித்துள்ளார்.