உழைத்து சேமித்த 50 ஆயிரம் பணத்தை கடித்துக் குதறிய எலி..! வங்கியிலும் மாற்ற முடியாததால் பரிதவிக்கும் விவசாயி..!

By Manikandan S R SFirst Published Oct 22, 2019, 11:28 AM IST
Highlights


கோவையில் விவசாயி ஒருவரின் 50 ஆயிரம் பணத்தை எலி கடித்து துண்டுத் துண்டாக ஆக்கியதால், அவர் பரிதவித்து வருகிறார்.

கோவை மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜ். விவசாயம் பார்த்து வருகிறார். அதன்மூலம் வரும் வருமானத்தை சிறுக சிறுக சேர்த்து வைத்து வந்திருக்கிறார். கடந்த அறுவடையில் அவரது உழைப்பின் பலனாக அதில் 50 ஆயிரம் பணம் கிடைத்துள்ளது. அதை சேமித்த ரங்கராஜ், ஒரு பையில் போட்டு வீட்டில் வைத்திருந்துள்ளார்.

அவரது வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. அடிக்கடி வீட்டில் இருக்கும் பொருட்களை நாசப்படுத்தி வந்துள்ளது. இந்தநிலையில் ரங்கராஜ் சேமித்து வைத்திருந்த 50 ஆயிரம் பணத்தையும் அது விட்டுவைக்கவில்லை. பணம் மொத்தத்தையும் கடித்து குதறி துண்டு துண்டாக ஆக்கியுள்ளது. செலவிற்காக பணம் எடுக்க பையை பார்த்த ரங்கராஜ் அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து செய்வதறியாது திகைத்துள்ளார்.

பரிதவித்து நின்ற அவரிடம் உறவினர்கள், வங்கிக்கு சென்று மாற்றிக்கொள்ளலாம் என்று ஆறுதல் கூறியுள்ளனர். இதையடுத்து அருகில் இருக்கும் வங்கிக்கிளைக்கு ரங்கராஜ் சென்றுள்ளார். அங்கு பணத்தை வாங்கிப்பார்த்த அதிகாரிகள், ரூபாய் நோட்டுகள் தாறுமாறாக கிழிந்திருப்பதால் அதை மாற்ற இயலாது என்று கூறியிருக்கின்றனர். இதனால் உழைத்து சேமித்த பணத்தை மீட்க முடியாமல் ரங்கராஜ் சோகத்தில் மூழ்கியுள்ளார். அதிகாரிகள் ஏதாவது வழிவகை செய்து தனது பணத்தை மாற்றித்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

click me!