குழந்தைகளை குறிவைக்கும் டெங்கு காய்ச்சல்..! கோவையில் 10 வயது சிறுமி பலி..!

By Manikandan S R SFirst Published Oct 19, 2019, 11:58 AM IST
Highlights

கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு 5ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
 

கோவையில் இருக்கும் புளியகுளம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி விசாலினி. இந்த தம்பதியினருக்கு தீபிகா(10) என்கிற மகள் இருந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாபு இறந்து விட்டார். இதனால் விஷாலினி தனது மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். அங்கிருக்கும் மருதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தீபிகா 5 ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபிகாவிற்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனாலும் தீபிகாவிற்கு காய்ச்சல் குறையாமல் இருந்திருக்கிறது. இதனால் கோவையில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

அங்கு மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்து பார்த்ததில், டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தீபிகாவிற்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் தீபிகா நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தீபிகாவின் உடலை பார்த்து கதறி துடித்தனர்.

10 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் பலியானது குறித்து சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரையிலும் 31 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 115 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்னர்.

click me!