அகழியில் சறுக்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த ஆண் யானை..! உணவு தேடி அலைந்த போது நிகழ்ந்த சோகம்..!

By Manikandan S R SFirst Published Oct 18, 2019, 11:12 AM IST
Highlights

பொள்ளாச்சி அருகே அகழியை கடக்க முயன்ற யானை ஒன்று தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ளது சரளபதி கிராமம். இந்த ஊரின் அருகே மேற்கு தொடர்ச்சி மலை இருக்கிறது. இதனால் மலையை ஒட்டிய பகுதிகளில் அகழி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அடிக்கடி யானைகள் கூட்டமாக வரும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த அகழியில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று சிக்கி உயிரிழந்து கிடந்தது. இதை பார்த்து அந்த ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் வனத்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளனர். விரைந்து வந்த பொள்ளாச்சி வனத்துறையினர் யானையின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் இரவு பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது தான் இறந்து கிடந்த ஆண் யானை உணவு தேடி வந்திருக்கும் என்று கூறப்படுகிறது. அகழியை கடக்க முயன்ற போது கால் சறுக்கி உள்ளே விழுந்ததில், யானையின் மார்பு மற்றும் தலையில் பலத்த அடிபட்டிருப்பது தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு யானையின் உடல் வன விலங்குகளின் மாமிசத்திற்கு விடப்படும் என்று வனத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரையிலும் ஆனைமலை வனப்பகுதியில் 4 யானைகள் உயிரிழந்திருப்பது இயற்கை ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

click me!