கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே டிவி மற்றும் கேஸ் அடுப்பு வியாபாரம் செய்யும் வடமாநில தொழிலாளர்களிடம் டிவியை திருடிய காவலர்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தாசம், சாருக். இவர்கள் இருவரும் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அடுத்த வரதராஜபுரத்தில் தங்கியிருந்து டிவி, கேஸ்அடுப்பு உள்ளிட்டப் பொருட்களை வீடு வீடாகச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த 20ம் தேதி கண்ணம்பாளையம் பகுதியில் டிவி விற்பனைக்காகச் சென்றுள்ளனர்.
கண்ணம்பாளையத்தில் நின்று காண்டிருந்த சூலூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த முருகன், பிரகதீஸ் என்ற காவலர்கள் தாசிம், சாருக்கை மறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் நீங்கள் வைத்திருப்பது திருடப்பட்ட டிவி. இதனை எங்கிருந்து எடுத்து வந்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து வடமாநில இளைஞர்கள் இருவரையும் அருகில் உள்ள இருச்சகர வாகனம் பழுதுபார்க்கும் இடத்திற்குள் அழைத்துச் சென்றனர்.
கொரோனா பாதித்த பகுதியில் அனைவருக்கும் பரிசோதனை? அமைச்சர் விளக்கம்
அங்கு அவர்கள் இருவரையும் கட்டி வைத்து சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் இருவரும் தங்கியிருந்த இடத்தை அறிந்து கொண்ட காவலர்கள் நேரடியாக வீட்டிற்குச் சென்று விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5 டிவிக்கள், கேஸ் அடுப்பு, 47 ஆயிரம் பணம் ஆகியவற்றை எடுத்து அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இருவரும் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவலர்கள் முருகன், பிரகதீசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டிய காவல் துறையினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை கண்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.