New Born Baby: பீகாரில் ரூ.1500, தமிழ் நாட்டில் 2.5 லட்சம்; குழந்தை இல்லாதவர்களை டார்கெட் செய்த வடமாநில தம்பதி

By Velmurugan sFirst Published Jun 10, 2024, 2:29 PM IST
Highlights

பீகார் மாநிலத்தில் ரூ.1,500க்கு பிறந்த குழந்தையை வாங்கி வந்து, தமிழ் நாட்டில் குழந்தை இல்லாத தம்பதியிடம் ரூ.2.5 லட்சத்திற்கு விற்பனை செய்த வடமாநில தம்பதியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம், சூலூர் அடுத்த திம்ம நாயக்கன்பாளையம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி விஜயன். இவருக்கும், இவரது மனைவிக்கும் கடந்த 17 ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாத நிலையில் இது தொடர்பாக பலரிடமும் தங்களது குறையை சொல்லி புலம்பி உள்ளார். இந்த நிலையில் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை முன்பு உணவகம் நடத்தி வந்த அஞ்சலி, மகேஷ் குமார் தம்பதியுடன் விஜயனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே அஞ்சலி மற்றும் மகேஷ் குமார் இருவரும் தங்களிடம் பிறந்து 15 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும், அந்த குழந்தை பீகாரில் இருப்பதாகவும் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால், விஜயனுக்கு அவரது பெயரில் ஆதார் கார்டு மற்றும் பிறப்பு சான்றிதழ் உடன் குழந்தையை பெற்று தருவதாக கூறியுள்ளனர். இதனை நம்பி விஜயன், பணம் தருவதற்கு ஒத்துக் கொள்ளவே அஞ்சலி பீகாரில் உள்ள தனது தாயாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

Latest Videos

மதுபோதையில் தினமும் ரகளை செய்த கணவன்; இளம் பெண் எடுத்த விபரீத முடிவால் தாய்பாலுக்காக ஏங்கி நிற்கும் குழந்தை

பீகாரில் இருந்த அஞ்சலியின் தாய் பூனம் தேவி மற்றும் அஞ்சலியின் சகோதரி மேகாகுமாரி ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பீகாரில் இருந்து பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை சூலூருக்கு கொண்டு வந்து அஞ்சலியிடம் கொடுத்துள்ளார். குழந்தையை பெற்றுக் கொண்ட அஞ்சலி மற்றும் மகேஷ் குமார் விவசாயி விஜயனக்கு இரண்டரை லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்றுள்ளார். முன்னதாக ஒரு லட்சத்து 80 ரூபாய் பணம் கொடுத்த நிலையில் மீதம் 70 ஆயிரம் தர வேண்டி இருந்தது.

இந்த சூழ்நிலையில் குழந்தை விற்பனை தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். தகவலின் பெயரில் சைல்ட் லைன் அமைப்பினர் தீவிர விசாரணை மேற்கொண்டு குழந்தை விற்பனையை உறுதி செய்தனர். மேலும் இது தொடர்பாக கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அழைத்ததன் அடிப்படையில், போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனுக்கும் தகவல் அளித்தனர். அதன் படி கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து குழந்தை விற்பனை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பிரதமர் மோடியிடம் தமிழர்களுக்கு தனி நாடு கோரிக்கையை முன்வைப்பேன் - மதுரை ஆதீனம் பரபரப்பு பேச்சு

விசாரணையில் குழந்தை விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், உணவகம் நடத்தி வந்த பீகார் தம்பதியினர் அஞ்சலி மற்றும் மகேஷ் குமாரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். 

அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீசாரின் விசாரணையில் அஞ்சலி, மகேஷ் குமார் தம்பதியினர் கோவையில் ஒரு பெண் குழந்தை மட்டுமின்றி மேலும் ஒரு ஆண் குழந்தையை ஆந்திராவைச் சேர்ந்த லாரி ஓட்டுனருக்கு 5 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி இருந்தது தெரியவந்தது. மேலும் மற்றொரு குழந்தை வேண்டும் என அஞ்சலி மகேஷ் குமார் மூலம் நாடகம் ஆடிய போலீசார் அஞ்சலியின் தாய் மற்றும் அவரது சகோதரியை கோவை வரவழைத்தனர். கோவை வந்த பூனம் தேவி மற்றும் மேகாவை கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாமல் சிரமப்பட்டதாகவும் 1500 ரூபாய் கொடுத்து குழந்தையை தாங்களே வளர்த்துக் கொள்வதாக கூறி கோவை கொண்டு வந்து விற்பனை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தனர். 

இதனையடுத்து சூலூரில் விற்கப்பட்ட பெண் குழந்தை மற்றும் பூனம் தேவி, மேகா ஆகியோர் கொண்டு வந்த ஆண் குழந்தை ஆகிய இரண்டையும் மீட்ட போலீசார் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் குழந்தையை வாங்கிய விவசாயி விஜயன் மற்றும் அஞ்சலி, மகேஷ் குமார், பூனம் தேவி, மேகா ஆகிய ஐந்து பேரை கைது செய்துள்ள போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணையை விரிவு படுத்தியுள்ள போலீசார் வேறு ஏதாவது குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!