கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க மக்கள் ஆதரவு! கந்த சஷ்டி கவசம் பாடி விழிப்புணர்வு பிரச்சாரம்

By Asianet TamilFirst Published Mar 26, 2021, 7:38 PM IST
Highlights

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிக்க கோரி சத்குரு தொடங்கியுள்ள கோவில் அடிமை நிறுத்து இயக்கத்திற்கு கோவையைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இன்று (மார்ச் 26) ஆதரவு தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் நம் தமிழ் கலாச்சாரத்தின் மூலமாகவும், ஆன்மீக ரீதியாக சக்தி ஸ்தலங்களாகவும் விளங்குகின்றன. நம் முன்னோர்கள் தங்கள் உயிருக்கும் மேலாக கருதி பல நூறு ஆண்டுகளாக காப்பாற்றி வந்த இக்கோவில்கள் இப்போது அரசின் அடிமைத்தனத்தில் சிக்கி படிப்படியாக அழிந்து வருகின்றன.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுமார் 44 ஆயிரம் கோவில்களில் 12,000 கோவில்களில் ஒரு கால பூஜை கூட நடப்பது இல்லை. பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருந்தும் பொறுப்பற்ற நிர்வாகத்தின் விளைவாக, 34 ஆயிரம் கோவில்கள் ஆண்டுக்கு வெறும் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாகவே வருமானம் ஈட்டுகின்றன. 37 ஆயிரம் கோவில்களில் பூஜை செய்வது, பராமரிப்பது, பாதுகாப்பது என அனைத்து பணிகளுக்கும் ஒரு கோவிலுக்கு ஒரு நபர் மட்டுமே இருக்கிறார்.

சுமார் 1200 தெய்வ திருமூர்த்திகள் திருடு போயுள்ளன. இந்த புள்ளிவிவரங்களை அறநிலையத் துறையே சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்தாண்டு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த 100 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10 முக்கிய கோவில்களை தவிர்த்து மற்ற கோவில்கள் இல்லாமல் அழிந்து போகும்.

இந்த அவல நிலைக்கு தீர்வு காணும் விதமாக, இந்தியாவில் இருக்கும் மற்ற மத வழிப்பாட்டு தலங்களை போல, இந்து கோவில்களையும் இந்து மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினர் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் இவ்வியக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், காஞ்சிபுரம், நாகர்கோவில், புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள 11 பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தி பாடல்கள் பாடி பொதுமக்களிடம் ஆதரவு திரட்டும் நிகழ்ச்சிகள் தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, கோவை மருதமலை முருகன் கோவிலில் பொதுமக்கள் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை கந்த சஷ்டி கவசம் பாடி தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

இதையடுத்து,கோவில்களின் முன்பாக நூற்றுக்கணக்கான மக்கள் கூடி #கோவில்அடிமைநிறுத்து என்ற
பதாகையை ஏந்தி நின்றும் தங்கள் ஆதரவை பதிவு செய்தனர். இதேபோல், ஈஷா ஆதியோகி
முன்பும் ஏராளமான மக்கள் திரண்டு ஆதரவு அளித்தனர்.

click me!