
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் தீயாய் சூடுபிடித்துள்ளது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் ஆகியன விநியோகிக்கப்படுவதை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக கரூர் மாவட்டத்தில் இருந்து அதிகமான புகார் வந்துள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாக கோவை, சென்னை, திருப்பூர் மாவட்டங்களில் அதிகமான புகார்கள் வந்துள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் காவல் ஆணையர் சுமித் சரண் ஆகியோரை தேர்தல் அல்லாத பணிகளுக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், பல்வேறு தரப்பிலிருந்தும் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் இருவரையும் தேர்தலுக்கு தொடர்பில்லாத பணிக்கு மாற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.