ஊழியர்களுக்கு கொரோனா... இழுத்து மூடப்பட்ட தேசிய வங்கி... அச்சத்தில் பொதுமக்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 24, 2021, 11:23 AM IST
Highlights

கோவையில் உள்ள வங்கியில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து வங்கி மூடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கொரோனா தொற்றின் 2வது அலை தொடங்கிவிட்டதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக தலைநகரான சென்னையை கொரோனா தொற்று ஆட்டிப்படைத்து வருகிறது. நேற்று உச்சமாக ஒரே நாளில் சென்னையில் 500க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கு அடுத்த படியாக கோவை உள்ளது. நேற்று அதிகபட்சமாக சென்னையில் 532 பேரும், கோவையில் 146 பேரும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தேர்தல் நேரத்தில் ஜெட் வேகத்தில் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தங்களால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் கட்டாயம் முகக்கவசங்களை அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளில் கொரோனா பரவலை தடுக்க விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் மற்றும் ஐடி நிறுவனங்களில் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து, முறையான தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கோவையில் உள்ள வங்கியில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து வங்கி மூடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பீளமேடு பகுதியில் உள்ள ‘சென்டர் பேங்க் ஆப் இந்தியா’ வங்கியில் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து  பீளமேடு வங்கி கிளை தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும், அவசர தேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் வங்கியின் மற்ற கிளைகளை அணுக அறிவுறுத்தப்பட்டு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. வங்கி ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்களது குடும்பத்தினர்,  அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
 

click me!